சுற்றுலாத் துறைக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளைத் தளர்த்துவது குறித்து தனது அமைச்சகம் பரிசீலிக்கும் என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கூறினார்.
சுற்றுலாத் துறையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படும் ஒரு முக்கியமான துறையாகக் கருதப்பட வேண்டும் என்று லிம் குவான் எங்(Lim Guan Eng) (Harapan-Bagan) வாதிட்டதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆட்சேர்ப்புக்கான நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கான திட்டம் நாட்டில் உள்ள தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாகும்.
ஜனவரி 17 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது உற்பத்தி, கட்டுமானம், தோட்டங்கள், விவசாயம் மற்றும் சேவைகள் (உணவகங்கள் மட்டும்) துறைகள் மற்றும் துணைத் துறைகளை உள்ளடக்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதலாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் ஒதுக்கீட்டு நிபந்தனைகளைப் பின்பற்றாமல் 15 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
சிவக்குமார் (மேலே) இன்று இந்தத் திட்டம் மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
ஐந்து துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (Foreign Worker Centralised Management System) தளத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விண்ணப்பிக்கலாம்.
மூன்று வேலை நாட்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கப்படும் என்று சிவகுமார் கூறினார்.
மலேசியாவுக்கு 500,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவை என்று தேசிய மீட்பு கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் காங்(Michael Kang) கடந்த ஆண்டு அக்டோபரில் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அனுபவிக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொற்றுநோய்க்குப் பிறகு நாட்டின் மீட்பு செயல்முறையை ஆதரிக்கவும் என்று அவர் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீது நம்பிக்கை
நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியிருப்பது குறித்து கேட்டதற்கு, உள்ளூர் தொழிலாளர்களின் ஆர்வமின்மையே இதற்குக் காரணம் என்று சிவகுமார் கூறினார்.
“உள்ளூர் தொழிலாளர்களுக்குப் போதுமான வேலைகள் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு முறைகள் மற்றும் வழிமுறைகள்மூலம் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க முயற்சிக்கிறோம்.
“இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான அமைச்சகத்தின் முடிவு தற்காலிகமானது மட்டுமே. எதிர்காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருப்பது குறைவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்றார்.
தொற்றுநோய்களின்போது 700,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதால் பொருளாதாரம் ஆபத்தில் இருப்பதால் தொழிலாளர் பற்றாக்குறை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று பத்து காஜா எம்பி முன்பு கூறினார்.