2018 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை நாடு தழுவிய ரீதியில் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகள் கொண்ட 339 காவல் அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில், 294 அதிகாரிகள்(86.7%) பேர் தீபகற்பத்திற்குள் மாற்றப்பட்டதாகவும், 25 அதிகாரிகள் (7.4%) சபாவிற்கும், 20 அதிகாரிகள் (5.9%) சரவாக்கிற்கும் மாற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதும், கிரிமினல் குற்றங்களைச் செய்ததும் கண்டறியப்பட்டதால் இந்த இடமாற்ற நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று நேற்று நாடாளுமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் செய்த குற்றங்களில் திருமணமான அதிகாரி, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபட்டது மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியவை அடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள இடமாற்றக் கொள்கை மற்றும் விதிகள், அதாவது சேவை சுற்றறிக்கை எண் 3, 2004 (அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது.