“மற்ற திருடர்களைப் போல அல்ல,” – முகிடின்

MACCயின் விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் முகிடின் யாசின் தான் “மற்ற திருடர்களைப் போல இல்லை” என்று கூறி, தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளார்.

முகிடின் (மேலே) தனது நிர்வாகத்தின் கீழ் பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்களுக்கான ஜனா விபாவா திட்டம்(Jana Wibawa programme)குறித்து ஒரு சாட்சியாக விசாரணைகளை எளிதாக்குவதற்காக ஊழல் தடுப்பு அமைப்பால் அழைக்கப்பட்டதாக விளக்கினார்.

முன்னாள் நிர்வாகம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை தவறாகப் பயன்படுத்தியதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறிய குற்றச்சாட்டுகள்குறித்து MACCயின் விசாரணை அதிகாரி தன்னை விசாரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

“நான் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட ரிம600 பில்லியன், ரிம530 பில்லியன், ரிம86 பில்லியன் அல்லது ரிம4.5 பில்லியன் ஆகியவை குறித்து எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை,” என்று அவர் இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி மெகமாலில் இரத்த தான பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஜன விபாவா குறித்து எனது அறிக்கையை வழங்குவதற்காக நான் அழைக்கப்பட்டேன். கோவிட் -19 தொற்றுநோய்களின்போது பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு உதவ அந்த நேரத்தில் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸால் முன்மொழியப்பட்ட திட்டமே ஜன விபாவா”.

“நிறுவனங்களை அங்கீகரிக்கவும் தேர்ந்தெடுக்கவும் நிதி அமைச்சகத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, அதே நேரத்தில் நிறுவனங்களின் பெயர்களைப் பரிந்துரைக்கப் பிரதமர் அலுவலகம் (PMO) ஈடுபட்டுள்ளது என்று நான் MACCக்கு விளக்கினேன், ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திடம் இல்லை”.

“நான் ஒரு சந்தேக நபரா, குற்றம் சாட்டப்படுவேனா என்று கேட்டேன். நான் ஒரு சந்தேக நபர் அல்ல, ஆனால் விசாரணைக்கு உதவுவதற்கான விளக்கங்களை வழங்குவதற்காக மட்டுமே அழைக்கப்பட்டதாக  என்னிடம் கூறப்பட்டது”.