ஒப்பந்தத்தில் உள்ளவர்கள் உட்பட 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு ஐடில்பித்ரி உதவி ரிம 700 மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரிம 350 என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
நிதியமைச்சரான பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த உதவி அரசு ஊழியர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் அடையாளமாகவும், ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு தயாராக அவர்களுக்கு உதவுவதாகவும் கூறினார்.
“அரசாங்கம் மாறுகிறது, தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள், ஆனால் அரசாங்கத்தின் முதுகெலும்பாக இருக்கும் அரசு ஊழியர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் விசுவாசமாக இருக்கிறார்கள்”.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்யும்போது, “மலேஷியா மதானியை நோக்கி நாம் நகரும்போது, அரசு ஊழியர்கள் விரைவாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும், மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையை வழங்குவதை இறுதி இலக்காகக் கொண்டு சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும்”.
அன்வார் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
முன்னாள் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கடந்த அக்டோபரில் மொத்தம் 372.3 பில்லியன் ரிங்கிட் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்தது, ஆனால் பட்ஜெட் மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 15வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதற்கிடையில், துருக்கியே மற்றும் சிரியாவில் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய தேடல் மற்றும் மீட்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நாளைக்கு RM100 சிறப்பு கொடுப்பனவை வழங்கத் தனது அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.
“இந்த உதவித்தொகை என்பது மனிதநேயத்தின் பெயரால் செய்யப்படும் மகத்தான செயல்களுக்கு அரசாங்கத்தின் பாராட்டுகளின் ஒரு வடிவமாகும்,” என்று அவர் கூறினார்.