விரைவில் ஆட்சி கவிழுமா? ‘மதிமயங்கிய’ ஹாடி தொடர்ந்து கூச்சலிடட்டும் – அன்வார்

தனது அரசாங்கம் விரைவில் கவிழும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கணிப்பைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேலி செய்தார்.

இன்று சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள புத்ரா மலேசியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பரவாயில்லை, அவர் (ஹாடி)  பிதற்றட்டும்,” என்றார்.

மார்ச் 1 அன்று கோலாலம்பூரில் யயாசான் பெர்மாதா உம்மா ஏற்பாடு செய்த “டயலொக் உலமா நெகரவான்: மெண்டேபானி கபரன் குளோபல்சாசி மீடியா மாசா” (Dialog Ulama Negarawan: Mendepani Cabaran Globalisasi Media Masa)நிகழ்வின்போது ஹாடியின் அறிக்கைகுறித்து கருத்து  தெரிவிக்கும்போது அவர் அவ்வாறு கூறினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

“இது எப்போது நடக்கும் என்று மக்கள் கேட்கிறார்கள், இது ஒரு கணிப்பு. அது எதிர்காலத்தில் நடக்கும்,”என்று ஹாடி கூறியதாகக் கூறப்படுகிறது, அவரது கணிப்பு எதை அடிப்படையாகக் கொண்டது அல்லது பெரிக்காத்தான் நேசனல் (PN) எதையாவது திட்டமிடுகிறதா என்பதைக் குறிப்பிடவில்லை.

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நிர்வாகம் மீண்டும் கவிழ்ந்தால் எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டக் கூடாது என்று ஹாடி கூறிய பின் ஒரு நாள் கழித்து அந்தக் கருத்து வந்துள்ளது.

ஹாடியின் கணிப்பு அமானா துணைத் தலைவர் மஹ்பூஸ் ஒமர் உட்பட பல ஹராப்பான் தலைவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது, இது அரசியல் நிலைத்தன்மைக்கான மாமன்னரின் ஆணைக்கு முரணானது என்று விவரித்தனர்.

பாஸ் தலைவரின் கருத்துக்கள் நாட்டின் பொருளாதார மீட்பு செயல்முறையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் மஹ்ஃபூஸ் கூறினார்.

பி.கே.ஆரின் கோட்டா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, ஹாடி இன்னும் “அரசியல் மனச்சோர்விலிருந்து” மீளவில்லை என்றும், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.