ஓஎஸ்ஏ (OSA) கீழ் எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து ஏதேனும் முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தால், அவர் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பாசிர் கூடாங் எம்.பி. ஹசன் கரீம் (மேலே), ஒரு வழக்கறிஞருமான அவர், ஹம்சா அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் பற்றிய “நிறைய கோப்புகள்” தன்னிடம் இருப்பதாகக் கூறியதை அடுத்து இவ்வாறு கூறினார்.

அமைச்சரின் அலுவலக கோப்புகள் அரசு சொத்து என்றும், அவற்றை அரசு கட்டிடங்களில் இருந்து வெளியே கொண்டு வரவோ அல்லது நகல் எடுக்கவோ முடியாது என்றும் ஹாசன் கூறினார்.

அமைச்சர்கள் பதவியேற்கும் போது யாங் டி-பெர்டுவான் அகோங் முன் சத்தியம் செய்யும் இரகசியங்களைப் பேணுவதற்கு அமைச்சர்களும் தங்கள் உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“ஹம்சாவின் கருத்துக்கள் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்திற்கு எதிரானது” என்று அந்த பிகேஆர் எம்பி நேற்று இரவு மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று வெளியிடப்பட்ட தி ஸ்டார் உடனான நேர்காணலின் போது ஹம்சா அத்தகைய ஆவணங்கள் தன்னைடம் இருப்பதாக அறிவித்தார்.

“எங்கள் குறையை மட்டும் கண்டுபிடியாதீர்கள். நான் உள்துறை அமைச்சராக இருந்த போது, ஆளும் கட்சியாக இருப்பவர்களுகு எதிராக நிறைய கோப்புகளை வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் அதை பயன்படுத்த இயலும்,” என்று  கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன்

மூடிமறைத்த ஹம்சா மீது விசாரணை நடத்துங்கள்

கெப்போங் எம்.பி லிம் லிப் எங், ஹசனின் கருத்தின் படி, சில அரசாங்க சார்பு அரசியல்வாதிகளின் மூடிமறைப்பிற்கு உடந்தையாக இருந்ததற்காக ஹம்சா விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த டிஏபி எம்பி  ஹம்சாவுக்கு மூன்று கேள்விகளை தொடுத்துள்ளார்.

“முதலாவதாக, ஹம்சா இப்போது தன்னிடம் இருப்பதாகக் கூறும் கோப்புகளை வைத்திருக்க முடியுமா, குறிப்பாக அவர் உள்துறை அமைச்சராக இருந்து விலகிய பிறகு?”

“பதில் ஆம் என்றால், ஜாஹித் ஹமிடி மற்றும் முஹைதின் யாசின் போன்ற மற்ற முன்னாள் உள்துறை அமைச்சர்களும் இதுபோன்ற ரகசிய பதிவுகளை தங்களிடம் வைத்திருப்பார்களா?”

“இரண்டாவதாக, கூறப்படும் கோப்புகளில் உள்ள குற்றச்சாட்டை ஹம்சா ஏற்கனவே அறிந்திருந்தால், அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது ஏன் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளைத் தொடரவில்லை?”

“தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களைப் பயன்படுத்துவேன் என்று அவர் ஏன் மிரட்டுகிறார்?”

“ ஹம்சா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் கோப்புகளை தனது பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்த முயல்கிறாரா?” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக, குற்றங்களை அதிகாரிகளிடம் தெரிவிப்பதன் மூலம் நீதியின் போக்கை நிலைநிறுத்துவதற்கு ஹம்சா கடமைப்பட்டிருப்பதை லிம் சுட்டிக்காட்டினார்.

“கோப்புகள் OSA இன் கீழ் இருந்தால், கோப்புகளைப் பிடித்துக் கொண்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை ஹம்சா செய்திருக்க மாட்டாரா?”

மேலும், முன்னாள் அமைச்சர் குற்றவாளிகளின் செயல்களை மறைப்பதில் அவர்களுக்கு உடந்தையாக இருந்தாரா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.

ஹம்சாவின் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் – அதன் தலைவர் முகைதின் யாசின் உட்பட – சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என்று பெர்சத்து தலைவர்கள் கூறினர்.

பிரதமர் அன்வார் இப்ராகிம் எம்ஏசிசி அல்லது காவல்துறையால் மேற்கொள்ளப்படும் எந்த விசாரணையிலும் தான் தலையிடவில்லை என்று மறுத்துள்ளார்.

பெர்சத்து தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதையும் அவர் மறுத்தார்.