உழைப்பாளி ஒரு வர்க்கத்தின் அடையாளம் – மே தின வாழ்த்துகள்  

சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை.

 ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ, என்ற சங்க கால புலவர் கபிலரின் வினாவுக்கான விடை இன்றுவரை பல பரிமாணங்களை அடைந்துள்ளதை வரலாறு காட்டுகிறது.

உழைப்பும் மூலதனமும் பரிமாண வளர்ச்சியடைந்த போது, இலாபம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இலாபம் யாருக்குச் சொந்தம் என்பதில் உழைப்பு தோற்றது. மூலதனத்தை மையமாகக் கொண்ட பொருள்முதல்வாத கொள்கை, உழைப்பை இன்னொரு விற்பனை பொருளாக மாற்றியது. உழைக்கும் வர்க்கம் விற்பனைக்கு விடப்பட்டனர். அடிமையாக்கப்பட்டனர்.

இன்று உழைப்புக்கு ஒரு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

மே தினம் என்பது 1886-இல் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் வெற்றியைப் பின்னணியாகக் கொண்டதாகும்.

நமது நாட்டில் இந்த குறைந்தபட்ச ஊதியம் போதாத நிலையில் இருப்பதால்  அரசாங்கத்தின் ஈடுபாடு அத்தியாவசியமாகிறது. மலேசிய அரசாங்கம் கீழ்நிலையில் இருக்கும் 40% மக்களுக்கான அனைத்து அனைத்துச் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் மீள்பார்வை செய்து, அவை தகுந்த வகையில், இனபாகுபாடு அற்ற வகையில் அனைத்து இன மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒதுக்கீடு போதுமாக இருப்பினும் அவை இன அடிப்படையிலும், தரமான வாழ்வாதார கொள்கை பின்னணி அற்ற வகையில் கையாளப்படிவதால், அவை தகுந்த பயனை அளிப்பதில்லை.

மலேசியர்களால் நடக்கவும் முடியும், ஓடவும் முடியும், ஆனால், ஒரு சாராருக்கு  கைத்தடி கொடுத்து காற்று வாங்க நடக்க வைப்பது போல் இருக்கும் சூழலை அரசு மாற்ற வேண்டும்.

உழைக்கும் வர்க்கம் உயர அரசாங்கம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்களை மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.