நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.
இக்கூட்டத்தின் முக்கிய விடயமாக இம்மக்களுக்கு 4 ஏக்கர் நிலத்தைப் பெற்று தரும் முகமாக ‘ 4 acres of land, lets light up Bukit Jalil’ எனும் சுலோகத்தில் பிரச்சாரம் ஒன்றை தீவிரமாக தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இப்பிரச்னையை நாடாளவிய மக்களின் ஆதரவை கோரும் முகமாக இப்பிரச்சாரம் இருக்குமென இதன் ஒருங்கிணைப்பாளர் நளினி செம்பருத்தியிடம் தெரிவித்துள்ளார்.
“கிட்டதட்ட இப்பிரச்னையும் புவா பாலா பிரச்னையும் ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில் அங்கு கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டை ஏன் இங்கு தர மறுக்கிறது என்பது கேள்வி குறியே. தேர்தல் வரை இப்பிரச்னையை ஆறப்போட்டு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என அரசு நினைப்பது நன்றாக புரிகிறது. எல்லா மக்கள் பிரச்னைகளும் மலினமான அரசியலாக்கப்படுவது வேதனையானது” என்றும் நளினி கூறினார்.
இப்பிரச்னையின் மையத்தை சொல்லும் துண்டு வெளியீடுகள், துண்டு அறிக்கைகள், சட்டைகள் என பல்வேறு விதத்தில் இப்பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இப்பிரச்னைக்கு முறையான தீர்வு காணும் மக்கள் ஆதரவை பெறவும் இப்பிரச்சாரம் உதவும் எனவும் நம்பப்படுகிறது. தீபாவளிக்கு முன்பாவது இவர்களின் வாழ்வின் ஒளி வருமா?
-யுவா