ரோஹிங்யா அகதிகளை உயர்கல்வியில் அனுமதிப்பதால் மலேசியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை

ரோஹிங்யா அகதிகள் மலேசியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிப்பது நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்று உயர் கல்வி அமைச்சர் முகமட் காலிட் நோர்டின் கூறினார்.

ரோஹிங்கியா அகதிகளை உள்ளூர் பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் நடவடிக்கைகுறித்து சில கட்சிகள் வெளிப்படுத்திய அதிருப்தி குறித்து கருத்து தெரிவித்த அவர், கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை என்றும், இந்த விஷயத்தில் மலேசியா சுயநலமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

“(இறையாண்மை பிரச்சினையில்) எந்தப் பிரச்சினையும் இல்லை. அகதிகளுக்கு உதவ வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட நாகரிக நாடுகளில் நாமும் (மலேசியா) ஒன்றாகும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செமரக் சிஸ்வா மதானி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரோஹிங்யா அகதிகளுக்குக் கல்வி கற்பதற்கான இடங்களை வழங்க மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் (International Islamic University of Malaysia) தயாராக இருப்பதாகவும், வளர்ச்சிக்கான கத்தார் நிதியத்திலிருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரிம 232 மில்லியன்) நன்கொடையைப் பயன்படுத்தி அவர்களின் கல்விக்கு நிதியளிக்கப்படும் என்றும் நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உள்ளூர் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர தகுதியுள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கும் இந்த நிதிமூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று காலிட் கூறினார்.

“இந்தச் சூழலில் (கல்வி), கத்தார் ரோஹிங்கியா அகதிகளுக்கு நன்கொடைகளை வழங்குகிறது மற்றும் பாலஸ்தீனம், சிரியா மற்றும் போஸ்னியா போன்ற பல அகதிகளுக்கு உதவ கத்தார் மற்றும் பிற அமைப்புகளை நாங்கள் அழைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டில், ரோஹிங்கியா அகதிகளுக்கான மனிதாபிமான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மலேசியாவிற்கு நிதியுதவி அளிப்பதாகக் காலித் உறுதியளித்தார்.

இதற்கிடையில், நிகழ்வில், மே மாதம் கம்போடியாவில் நடந்த 32வது SEA விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற 31 உயர்கல்வி மாணவர்களுக்கும் தலா RM2,000 ரிங்கிட் வழங்கினார்.