ஒரே ஒரு பதவி மட்டுமே காலியாக உள்ளதால், அமைச்சரவை மாற்றத்தை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
“ஒருவேளை, நான் அதைப் பற்றிப் பின்னர் யோசிப்பேன். ஒரே ஒரு காலியிடம் இருப்பதால் அவசரத் தேவை இல்லை,”என்று அவர் கூறினார்.
பெர்னாமாவின் அறிக்கையின்படி, சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுடனான சந்திப்பில் வழக்கத்திற்கு மாறான எதுவும் இல்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜூலை மாதம் சலாவுதீன் அயூப் மரணமடைந்ததால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் பதவி காலியாகி இன்னும் நிரப்பப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அன்வார் இந்த விஷயத்தைப் பற்றி “சிந்திப்பதாக” கூறினார்.
அமைச்சரவை வரிசையில் விரைவில் மாற்றம் ஏற்படுமா என்று செய்தியாளர்களிடம் கேட்டபோது, “நான் அதைப் பற்றி யோசிப்பேன்,” என்று அவர் கூறினார்.
அத்தகைய மறுசீரமைப்பு உடனடியானது என்ற ஊகங்களுக்கு மத்தியில், அன்வார் ஒரு பெரிய அமைச்சரவை குலுக்கலுக்குத் தயாராகி வருவதாக மலேசியாகினி முன்பு தெரிவித்தது.
வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய அன்வார், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைச் சமாளிக்க மக்களுக்கு உதவ அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் கூறினார்.
செயற்படும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முகமட் அலி மற்றும் பிரதியமைச்சர் புசியா சலே ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.
வாழ்க்கைச் செலவு தொடர்பான தேசிய நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் இந்த விவகாரம்குறித்து கவனம் செலுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
உண்மையில் ஒரு சிக்கல் உள்ளது, பொருட்கள் மற்றும் தேவைகளின் (ஏறும்) விலையில் உள்ள பிரச்சனையை நான் ஒப்புக்கொள்கிறேன். அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெங்காய ஏற்றுமதி வரிகளின் அதிகரிப்பு காரணமாகச் சில நாடுகள் பெரும் சமூக அமைதியின்மையை அனுபவித்ததையும் பார்த்தோம், இவை அனைத்தும் பொருளாதாரம் மற்றும் பொருட்களின் விலைமீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
“இருப்பினும், நாங்கள் அதைத் தீர்க்க முயற்சிப்போம். நிதி அமைச்சகம் எப்பொழுது உதவி செய்ய வேண்டுமோ, அப்போது நாங்கள் அதைச் செய்வோம்,” என்று இன்று Menara TH தபுங் ஹாஜியின் 60வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.