கூலிம் மது தடை:கெடா அரசைக் கீழறுக்கும் செயலா?

கூலிம் மாவட்ட நிர்வாகம் இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து மது விற்பனையை நிறுத்திவைக்க  செய்துள்ள முடிவு, கெடா அரசைக் கீழறுக்கும் ஒரு செயலாகும் என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

அது, மாவட்ட அலுவலகம் கெடா அரசுக்கோ அதன் ஆட்சிக்குழுவினருக்கோ தெரிவிக்காமல் தன்மூப்பாக எடுத்துள்ள ஒரு முடிவு என்று கூலிம் சட்டமன்ற உறுப்பினர் லிம் சூ நீ கூறினார்.

அதன் தொடர்பில் புகார்களைப் பெற்றதாகக் கூறிய லிம் (இடம்), மாவட்ட அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது அது, ஜூனுக்குப் பிறகு மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறிற்று என்றார்.

“இது, கெடா பக்காத்தான் ரக்யாட் அரசுக்கு எதிரான ஒரு சதியாகவும் இருக்கலாம்.யாரோ எங்களைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்”, என்று லிம் கூறினார்.

த ஸ்டார் நாளேடும், மதுக் கடை வைத்திருப்போருக்கு அவர்களின் மது விற்பனை உரிமம் ஜூன் மாத இறுதியில் தானாகவே முடிவுறும் என்று  கூறும் கடிதங்கள் வந்து சேர்ந்திருப்பதாக  இன்று தெரிவித்தது.

மாவட்ட அலுவலகம் எடுத்துள்ள இம்முடிவால் சுமார் 100 மது விற்பனைக் கடைகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு கூலிம் மாவட்ட அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

கூலிமில் மட்டும்தான் இம்முடிவா என்று வினவியதற்கு கூலிம் மட்டுமே இப்புதிய முடிவை எடுத்துள்ளது என்று லிம் தெரிவித்தார்.

அதற்குப்  பக்கத்தில் உள்ள மாவட்டமான பண்டார் பாருவிலும் இதேபொன்ற விதி நடைமுறைக்கு வந்துள்ளதா என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனால், அங்கு பிஎன் காலத்திலிருந்தே மது விற்பனைக்குத்  தடை அமலில் இருப்பதாக தெரிகிறது.

“இதை கெடா மந்திரி புசாருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

“குடியிருப்பாளர்களும் கடைக்காரர்க்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்விவகாரத்தைக் கவனிக்க அவகாசம் தேவை. இதற்குத் தீர்வு காணாது போனால் ஆட்சிக்குழுவிலிருந்து விலகுவேன்”, என்றாரவர்.

இப்புதிய விதி, கெடாவை இஸ்லாமியமயமாக்கும் பாஸ் திட்டத்தின் ஒரு பகுதியா என்று வினவியதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று லிம் மறுத்தார்.

“ஆட்சிக்குழுவில் உள்ள எங்களுக்கே தெரியாது. அது மாவட்ட அலுவலகம் எடுத்த ஒரு முடிவு”, என்றார்.

இதனிடையே, கூலிம் பண்டார் பாரு மசீச தலைவர் சுவா தியோங் கீ, மாவட்ட அலுவலகத்துடன் பேச்சு நடத்தி அவ்விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

“மாவட்ட அலுவலகம் அல்லது மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்றால், விவகாரத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்வோம். இப்போதைக்குப் பாதிக்கப்படும் கடைக்காரர்களின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம்.”

சிலர், அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அஞ்சி தகவல் அளிக்க முன்வரத் தயங்குகிறார்கள் என்றாரவர்.

TAGS: