நீண்ட காலமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவை பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரியாகக் கருதி வந்த மலேசியா, தற்போது சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“40 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட எந்தவொரு கொள்கையையும் மறுபரிசீலனை செய்ய நாங்கள் திறந்திருக்க வேண்டும்,” என்று டிசம்பர் 17 அன்று டோக்கியோவில் பேட்டியளித்தபோது அவர் ஆசாஹி ஷிம்புனிடம் கூறினார்.
நான்காவது பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் 1982 இல் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து பொருளாதார நவீனமயமாக்கல் உத்திகளைக் கற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்திய கிழக்கு நோக்கிய கொள்கையைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
“நான் ‘கிழக்கு’ (கொள்கையில்) சீனா இல்லாமல் ஜப்பான் மற்றும் தென் கொரியா என்று சொல்லமாட்டேன். இப்போது, ’கிழக்கைப் பார்’ என்று நாம் கூறும்போது அது சீனா உட்பட,” என்று ஜப்பானிய செய்தித்தாள் மேற்கோள் காட்டியது.
டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் பிற சிக்கல்கள் உலகை மாற்றி வருவதாகவும், மலேசியா பல தசாப்தங்கள் பழமையான கொள்கையை விரிவுபடுத்த வேண்டும், அதே நேரத்தில் இன்னும் நன்மை பயக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
பிராந்திய மோதல்கள்
ஜப்பான் மற்றும் ஆசியான் இடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 15 முதல் டோக்கியோவிற்கு ஐந்து நாள் பணி பயணமாகப் பிரதமர் சென்றார்.
மலேசியா “வலுவான மற்றும் சுதந்திரமான” வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது. மேலும் மலேசியாவின் நலன்களைப் பொறுத்தே அந்த நாடு சீனாவுடன் கையாளும் என்றார்.
அன்வார் அமெரிக்காவிற்குச் சென்றபோது (சமீபத்தில் Apec 2023 இன் போது), மலேசியா ஏன் சீனாவின் பக்கம் சாய்கிறது என்று கேட்கப்பட்டதாகக் கூறினார்.
அவர் பதிலளித்தார்: “அவர்கள் அதிக முதலீடு செய்கிறார்கள்.”
ஆனால், தென்சீனக் கடலில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாகச் சீனாவுடன் மலேசியா உறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் பெய்ஜிங்கின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை அனுமதிக்காது என்றும் அன்வார் கூறினார்.
ஜப்பானை “மிக முக்கியமான மூலோபாய பங்காளர்” என்றும் பிரதமர் விவரித்தார், ஜப்பானிய பணி நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்வது போன்ற கிழக்கு நோக்கிய கொள்கையின் கீழ் ஜப்பானுடனான மலேசியாவின் உறவை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மூலோபாய கூட்டாண்மை
உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் மீட்பு படகுகள் மற்றும் ட்ரோன்கள் உட்பட 400 மில்லியன் யென் (சுமார் ரிம 13.2 மில்லியன்) மதிப்புள்ள எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை மலேசிய இராணுவத்திற்கு வழங்குவதாக ஜப்பான் டிசம்பர் 16 அன்று அறிவித்தது.
மலேசியா தனது பிராந்திய கடல்பரப்பைப் பாதுகாக்க உதவும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், இதில் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது பெரிய விமானங்கள் எதுவும் இல்லை என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
“முக்கியமாக எங்கள் சொந்த பாதுகாப்புத் தேவைகளுக்காக, தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு வழிமுறைகளுக்காக அல்ல,” என்று அன்வர் கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது, மலேசியாவும் ஜப்பானும் தங்கள் இருதரப்பு உறவுகளை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தியுள்ளன.