அன்வாரை ஆதரிக்கும் பிரதிநிதிகளுக்கு எதிராகப் பெர்சத்து சட்ட நடவடிக்கை எடுக்கும்

பிரதம மந்திரி அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் இடங்களைக் காலி செய்வதற்கான சட்ட நடவடிக்கையைத் தொடர பெர்சத்து ஒப்புக்கொண்டுள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற உச்ச கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கட்சியின் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்தார்.

“இடைத்தேர்தலை எதிர்கொள்ளப் பெர்சத்து தயாராக உள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன் ஆறு எம்.பி.க்கள் கட்சியை விட்டு விலகாமல் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தாவல் எதிர்ப்பு சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக, எம். பி. க்கள் கட்சி கொறடாவிற்கும் கொள்கைகளுக்கும் எதிராகச் சென்றால் தங்கள் இருக்கைகளைக் காலி செய்ய வேண்டியதில்லை.

தஞ்சோங் கராங் எம்.பி.யான சுல்காஃப்பெரி ஹனாபி, தனது தொகுதியினரின் நல்வாழ்வைக் காரணம் காட்டி, ஜனவரி 24 அன்று பிரதம மந்திரிக்குத் தனது ஆதரவை அறிவித்த சமீபத்திய பெர்சத்து சட்டமியற்றுபவர் ஆவார்.

கடந்த ஆண்டு, ஐந்து பெர்சத்து எம்.பி.க்கள் அன்வார் பிரதமராக நீடிக்க ஆதரவை அறிவித்தனர். இதில் புக்கிட் கந்தாங் எம்.பி சையத் அபு ஹுசின் (நவம்பர் 28), ஜெலி எம்.பி ஜஹாரி கெச்சிக் (நவம்பர் 8), குவா முசாங் எம்.பி முகமட் அசிசி முகமது நைம் (நவம்பர் 7), லபுவான் எம்.பி. சுஹைலி அப்துல் ரஹ்மான் (அக். 30), மற்றும் கோலா கங்சார் எம்.பி. இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் (அக். 12).

நேற்று, உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க ஒரு குழுவை வழிநடத்த சையத் அபு ஹுசின் நியமிக்கப்பட்டுள்ளதாக அன்வார் அறிவித்தார்.

இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வரிசையில் வைத்திருக்க, கட்சியின் அரசியலமைப்பின் 10 வது பிரிவில் திருத்தம் செய்யப் பெர்சாத்துவின் உச்ச கவுன்சில் ஒப்புக்கொண்டதாக ஹம்சா கூறினார்.