இராகவன் கருப்பையா- நம் நாட்டில் நோன்பு மாதத்தின் போது பள்ளிச் சிற்றுண்டிகள் மூடப்படுவதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படும் அவதி புதிய விவகாரம் ஒன்றுமில்லை. உலகிலேயே அனேகமாக நம் நாட்டில் மட்டும்தான் இத்தகைய ஒரு நிலை நிகழ்கிறது என்று நம்பப்படுகிறது.
சமயத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திவரும் குறிப்பிட்ட பல அரசியல்வாதிகளின் போக்கிற்கு ஏற்ப அண்மைய ஆண்டுகளாகத்தான் இப்பிரச்சனை சற்று தீவிரமடைந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.
ஏனென்னில் ஆசிரியர்களின் வழி பள்ளிக்கூடங்களிலும் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கப் பள்ளிகளை நிர்வாகம் செய்ய வழிவகுத்தது குறிப்பிட்ட பல அரசியல்வாதிகள்தான் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் வரையில்கூட இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி நாம் கேள்விபட்டதில்லை.
கடந்த பல ஆண்டுகளாக பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இவ்விகாரத்திற்கு கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இம்முறை தீர்க்கமானதொரு முடிவை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
நோன்பு மாதத்தின் போது பள்ளிச் சிற்றுண்டிகள் மூடப்படக் கூடாது என்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் மரியாதையாக நடத்தபட வேண்டும் எனவும் கண்ட கண்ட இடங்களில் அவர்கள் உணவு உன்னும் அவலம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் சிலாங்கூர் சுங்ஙை பூலோவில் உள்ள ஒரு தேசிய பள்ளியில் நோன்பு மாதத்தின் போது முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கழிப்பறையில் உணவு உட்கொள்ள நிர்பந்திக்கப்பட்ட சம்பவம் நாடு தழுவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.
அந்த சமயத்தில் கல்வித்துறை துணையமைச்ராக இருந்த ம.இ.கா.வின் கமலநாதனும் கூட பள்ளி வரையில் சென்று அப்பிரச்சனைக்கு தீர்வுகாண இயலவில்லை.
பள்ளியின் தலைமையாசிரியரை சந்திக்கவேண்டும் என பெற்றோர்கள் அடம் பிடித்தனர். அவர் வெளியாகிவிட்டார் என கமலநாதன் தற்காத்துப் பேசி அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டார். எனினும் அவர் பள்ளிக்குள்தான் இருந்தார் எனும் உண்மையை பெற்றோர்கள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து கமலநாதனும் அந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
கடந்த காலங்களில் சில கல்வியமைச்சர்களும் கூட சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளப் பயந்து பல வேளைகளில் இவ்விவகாரத்தைக் கண்டும் காணாததைப்போல்தான் இருந்து வந்துள்ளனர்.
எனினும் இம்முறை ஃபட்லினாவின் துணிச்சலான முடிவை வழக்கம் போல பாஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் அரசியலாக்கி ஆதாயம் தேட முற்பட்டது வியப்பில்லாத ஒன்றுதான்.
அவருடைய முடிவுக்கு எதிராக கருத்துரைத்த பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர், நோன்பின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் அதனை மதிக்க மற்ற மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் எனவும் வாதிட்டார்.
இப்படியெல்லாம் பேசினால்தான் மதத்தைத் தற்காக்கும் ‘ஹீரோ’ எனும் பெயரை சம்பாதிக்கலாம் என்று எண்ணி பல சில்லறை அரசியல்வாதிகள் இதுபோன்ற விவகாரங்களை கையிலெடுப்பது நம் நாட்டில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இருப்பினும் தனது உத்தரவை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பின்பற்றுவதை ஃபட்லினா உறுதி செய்வது அவசியமாகும்.
ஒரு சில தலைமையாசிரியர்கள் ‘குட்டி நெப்போலியன்’களாக சுயமாக விதிமுறைகளை அமைத்துக் கொண்டு அமைச்சரின் உத்தரவுக்கு மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது.
ஆக முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ஓரங்கட்டப்படாமல், அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான தனது முடிவு ஆக்ககரமான பலனை அளிப்பதை ஃபட்லினா உறுதி செய்ய வேண்டும்.