வரலாறு கண்ட சகாப்தம்: ஞானபாஸ்கரன் நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா – மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர்  ஞானபாஸ்கரன் ‘வரலாறு கண்ட சகாப்தம்: 3 தலைமுறையின் பயணம்’ எனும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் (NUPW மண்டபம்) நடைபெறவுள்ளது.

சுமார் 112 ஆண்டு கால குடும்ப வரலாற்றையும் நிகழ்வுகளையும்  சித்தரிக்கும் இப்புத்தகம் தமிழ், ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளிலும் ஒருசேர வெளியீடு காணவிருக்கிறது என்றார் அவர்.

கடந்த 1912ஆம் ஆண்டில் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு குடிபெயர்ந்த அவருடைய தாத்தா கெடாவில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் பால்மரம் வெட்டும் தொழிலாளியாக வேலை செய்தவர்.

திருமணத்திற்குப் பின் ஜொகூர் மாநிலத்திற்கு இடமாறிய அவர் கையிலிருந்த சிறிய சேமிப்பைக் கொண்டு  மலிகைக் கடை ஒன்றைத் திறந்து வியாபாரத்துறையில் ஒரு சகாப்தத்தையே உருவாக்கியிருக்கிறார்.

தாத்தாவைப் பின்பற்றி தமது தந்தையும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு கடுமையான உழைப்பின் வழி வெற்றி கண்டதாக கூறிய பாஸ்கரன், அறுவர் கொண்ட குடும்பத்தில் மூத்த மகனாவார்.

கடந்த 1976ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்த அவர்  நாடு திரும்பியதும் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் ம.இ.கா.வில் உயர் நிலையில் இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் தமது நூலில் விரிவாக எழுதியுள்ளதாக பாஸ்கரன் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய நிலையில் எண்ணற்ற இயக்கங்களில் இன்னும் தீவிர பங்காற்றி வரும் அவர் தமது 52 ஆண்டு கால பொது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவராக தேர்வு பெற்று கோறனி நச்சிலின் சீற்றத்திற்கு எதிராக  சிறப்பாக சேவையாற்றிய பாஸ்கரன் இந்நூல் வெளியீட்டின் வழி கிடைக்கும் தொகையை கல்வி சார்ந்த இயக்கங்களுக்கு வழங்கப்போவதாவும் கூறினார்.