அடுத்த பொதுத்தேர்தலில் அழிக்க முடியாத மை?

அடுத்த பொதுத் தேர்தலில் யாரும் இரண்டு முறை வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அழிக்க முடியாத மை “இன்னும் ஒரு சாத்தியமான வழி” என தேர்தல் ஆணையம் (இசி) கூறுகிறது.

கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அந்தத் தகவலை வெளியிட்டார்.

“இறைவன் கருணை இருந்தால் அடுத்த தேர்தலில்” இசி அது குறித்து முடிவு செய்யும் என்றார் அவர்.

இசி தற்போது மூன்று வழிகளை ஆராய்வதாக அவர் சொன்னார்- அழிக்கமுடியாத மையைப் பயன்படுத்துவது, கைவிரல் ரேகை முறையைப் பயன்படுத்துவது அல்லது ஒரே சமயத்தில் இரண்டையுமே பயன்படுத்துவது ஆகியவையே அந்த வழிகள் ஆகும்.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் எந்த முறையும் கட்டாயமாக்கப்பட்டால் ஏற்படக் கூடிய சட்ட விளைவுகளை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

பதிவு செய்யப்பட்ட எந்த வாக்காளரும் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்படக் கூடாது என கூட்டரசு அரசியலமைப்பு கூறுவதே அதற்குக் காரணமாகும்.

அந்த முறை “தன்னார்வ” அடிப்படையில் இருந்தால் அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படாது என அவர் விளக்கினார்.

ஆனால் அது தன்னார்வ அடிப்படையில் இருந்தால் சாத்தியமான இரண்டு முறை வாக்களிப்பைத் தடுக்க முடியாது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“அதனால் ஒவ்வொருவரும் அதனைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அதனைச் செய்ய விரும்பா விட்டால் எடுத்துக்காட்டுக்கு பாரம் ஒன்றை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

அந்த முறை கட்டாயமாக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தாக்கல் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அரசியல் தேர்தல் ஆணையத்தின் பணிகளை சிரமமாக்கலாம். அரசியல்வாதிகள் திருத்தத்தை தடுப்பதற்கு ஒன்று சேர முடியும்”, என்றார் அப்துல் அஜிஸ்.

TAGS: