தொழிலாளர் தின பேரணியில் ஆயிரக்கணக்கானோர் ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,500 தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தொழிலாளர் உரிமைகளைக் கோரி டாத்தாரன் மெர்டேக்காவுக்கு அணிவகுத்துச் சென்றனர். இவர்கள்  ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர்

கோலாலம்பூர், ஜாலான் துன் பேராக்கில் உள்ள மெனாரா மேபாங் அருகில் அவர்கள் ஒன்று கூடி அணிவகுத்தனர்.

இந்த பேரணிக்கு மலேசியா சோசியாலிஸ் கட்சி (பிஎஸ்எம்) பூர்வ குடிகள்  மையம் (சிஓஏசி), மகளிர் உதவி சங்கம், போர்னியோ கொம்ராட் மற்றும்  60 உரிமைகளை கோரும் குழுக்கள் ஆதரவு அளித்தன.

பங்கேற்பாளர்கள் அரசாங்கத்திடம் எட்டு உரிமைகளைக் கோரினர்:

  1. குறைந்தபட்ச ஊதியத்திற்குப் பதிலாக RM2,000 “வாழ்க்கைச் செலவு” சம்பளத்தை நடைமுறைப்படுத்துதல், மற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த முறையை ஒழித்தல்;
  2. அனைத்து அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் சுகாதார உரிமைகள்;
  3. எந்த மாற்று இருப்பிடமும் வழங்காமல் கட்டாயமாக வெளியேற்றுவதை நிறுத்துதல்;
  4. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுரண்டுவதை நிறுத்துதல்;அவர்களுக்கு சம உரிமைகளை வழங்குதல் மற்றும்
  5. மளிகைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல்;
  6. பாலின பாகுபாடு போன்ற அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்களை ரத்து செய்தல்;
  7. தண்ணீர், மின்சாரம், பொது போக்குவரத்து, கல்வி போன்ற அடிப்படை தேவைகள் தனியார்மயமாக்குவதை நிறுத்துதல்; மற்றும்
  8. ஒராங் அஸ்லியின் பூர்வீக நிலத்தை அங்கீகரித்தல்.

 

நாட்டின் வளத்தை நியாயமான வகையில் அனைவரும் பயனடையும் வகையில் விநியோகத்திற்கான அழைப்பு

செய்தியாளர் சந்திப்பின் போது, PSM தலைவர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமான பங்கீடு தேவை என்று வலியுறுத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 மடங்கு அதிகரித்துள்ள போதிலும், தொழிலாளர்களின் சம்பளம் 1.3 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

“நாட்டின் செழிப்பு நமது கூட்டு முயற்சியின் விளைவாகும். இருப்பினும், நன்மைகள் விகிதாசாரத்தில் குறைவாகவே உள்ளன.

“அனைவருக்கும் நியாயமான வகையில் நாட்டின் வளம் பயன் படுத்தப்படவேண்டும்,” என்று அவர் கூறினார்.

 பேரணியில் கலந்து கொண்ட தைப்பிங் மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளியான ரோசியா ஹாஷிம், நிரந்தரப் வேலைகள் வேண்டும் ஒப்பந்த வேலை முறையை ஒழிக்க வேண்டும் என்று தனது முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டார்.

ஏறக்குறைய 16 வருட சேவை இருந்தபோதிலும், அவர் ஒரு மாதத்திற்கு RM1,500 மட்டுமே சம்பாதிக்கிறார், கூடுதல் நேரத்தின் மூலம் அவரது அதிகபட்ச மாத வருமானம் RM1,800 ஐ எட்டுகிறது என்றார்.

“நாடு முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பதவி மற்றும் நியாயமான ஊதியத்தை நாடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

கிளந்தனின் கம்பூங் கெலைட் குவா முசாங்கிலிருந்து பயணித்த அசு உடா, ஒராங் அஸ்லியின் பூர்வீக நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம் என்று அங்கீகரிக்கப்படவேண்டும் எனக் கோரினார்.

“ஒராங் அஸ்லிகள் பல தலைமுறைகளாக இந்த நிலத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் உரிமைகள் மற்றும் மூதாதையர் நிலங்கள் அங்கீகரிக்கப்படும் நேரம் இது!” அவர் வலியுறுத்தினார்.

மதியம் 12.30 மணியளவில் பேரணி நிறைவு பெற்றது.