மருத்துவ மாணவர்களின் இனவாத பார்வை  பேரிடராகும்- அம்பிகா கவலை 

பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீநிவாசன் சில குறிப்பிட்ட மாணவர்கள் இனவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை பார்ப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அவர் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) மாணவர் பேரவையின் நடவடிக்கையை குறிப்பிட்டார்.

அது பூமிபுத்ரா அல்லாத மருத்துவ மாணவர்களை இருதய அறுவை சிகிச்சை துறையில் படிப்பைத் தொடர அனுமதிப்பதை ஆட்சேபித்து பிரச்சாரத்தை நடத்தியது.

“UiTM பிரச்சினையில், பூமிபுத்ரா அல்லாத மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவ மாணவர்கள், பிற்காலத்தில் அவர்கள் எப்படிப்பட்ட மருத்துவர்களாக மாறுவார்கள் என்று நான் கவலைப்படுகிறேன்.”

“அவர்கள் மருத்துவப் படிப்பை இனவாத பார்வையில் பார்ப்பது மருத்துவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது, அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன சமூக மன்ற மண்டபத்தில் நடைபெற்ற பெர்சே காங்கிரஸில் ஒரு குழு உறுப்பினராக அம்பிகா பேசினார்.

ஏப்ரல் 25 அன்று, ஹெல்த் நியூஸ் போர்டல் Codeblue, UiTM-IJN  மருத்துவ கல்வி திட்டக் குழு உறுப்பினர் ராஜா அமின் ராஜா மொக்தார், UiTM, பூமிபுத்ரா அல்லாத பயிற்சியாளர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையில் மேம்பட்ட கல்வியைப் பெறுவதற்கான பாதையைத் திறக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியது.

இதற்கு பதிலடியாக, மே 14 அன்று சுமார் 100 UiTM மாணவர்கள் உயர்கல்வி நிறுவனத்தின் கதவுகளை பூமிபுத்தரா அல்லாத ஏழு மேல் நிலை கல்விக்கான மருத்துவர்களுக்கு தற்காலிகமாக திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

#MahasiswaUiTMBantah என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய பிரச்சாரத்தில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த கருப்பு ஆடைகளையும் அணிந்தனர்.

இருப்பினும், மாணவர் பேரவை பின்னர் நடந்ததை “தவறு” என்று விவரிப்பதன் மூலம் மன்னிப்பு கேட்டது மற்றும் சம்பவத்திலிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறியது.