எவரெஸ்ட் பிஷ் கறி மசாலா(Everest Fish Curry Masala) மற்றும் MDH கறி பவுடர் (MDH Curry Powder) ஆகிய இரண்டு இந்திய மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் அவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த உணவுப் பொருட்களுக்கான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்ட அதே வேளையில், இந்தத் தயாரிப்புகளின் இருப்புகளைக் கொண்ட இணைய விற்பனையாளர்கள் உட்பட வர்த்தகர்களுக்கு அமைச்சகம் விற்பனையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பூச்சிகளைக் கொல்ல பெரும்பாலும் பயன்படுத்தப்படும் எத்திலீன் ஆக்சைடு, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளிலிருந்து மசாலாப் பொருட்களில் நுண்ணுயிரியல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் துப்புரவு முகவர்களில் செயலில் உள்ள மூலப்பொருளாகச் செயல்படுகிறது.
“புற்றுநோயை உண்டாக்கும் தன்மை காரணமாக உணவு மற்றும் உணவு-தொடர்பு பொருட்களில் அதன் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை,” என்று அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம்வரை மலேசியாவின் உணவுப் பாதுகாப்புத் தகவல் அமைப்பு (FoSIM) மூலம் தரவை மதிப்பாய்வு செய்ததில் எவரெஸ்ட் மீன் கறி மசாலா பிராண்டின் ஒரே ஒரு இறக்குமதி மட்டுமே தெரியவந்துள்ளது.
மலேசியாவில் MDH கறி பொடி பிராண்டின் இறக்குமதிகள் எதுவும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்டம் (PKKM) மூலம் அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள நுழைவுப் புள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் அமலாக்கத்தை நடத்துகிறது,”.
தற்போது, அமைச்சகம் நாட்டிற்குள் நுழையும் அனைத்து இடங்களிலும் மசாலாப் பொருட்களில் உள்ள அஃப்லாடாக்சின், கன உலோகங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணித்து வருகிறது.
2019 முதல் கடந்த ஏப்ரல் வரையிலான கண்காணிப்பில் 43 மாதிரிகள் சட்டப்பூர்வ உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பது கண்டறியப்பட்டது.
“சுகாதார அமைச்சகம் விழிப்புடன் உள்ளது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் பற்றி அக்கறை கொண்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.