அன்வார் இப்ராகிமை பிரதமராகக் காத்திருப்பவர் என்று வருணித்த டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பிகேஆர் நடப்பில் தலைவர் குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படுவார் என்று முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
“நாளை அன்வார் விடுவிக்கப்படுவார். அதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. விடுதலை பெறும் தகுதி அவருக்கு உண்டு”, என்று கர்பால் அறிவித்தார்.
இன்று ஷா ஆலமில் டிஏபி தேசிய பேராளர் கூட்டத்துக்கிடையில் கர்பால் செய்தியாளர்களிடம் பேசினார்.
அன்வார் விடுவிக்கப்படுவார் என்பதால் இடைக்காலப் பிரதமர் எல்லாம் தேவையில்லை என்று கூறிய அவர், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றியதும் அன்வார் பிரதமர் ஆவார் என்றார்.
இலக்கு: ஒன்பது மாநிலங்கள்; புத்ரா ஜெயா
பொதுத் தேர்தலில் டிஏபி கொண்டுள்ள இலக்குகளையும் கர்பால் விவரித்தார்.
“ஒன்பது மாநிலங்களையாவது கைப்பற்றி புத்ரா ஜெயாவில் ஆட்சியை அமைப்போம்….இது ஒன்றும் அடைய முடியாத இலக்கல்ல”, என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள 700-பேராளர்களும் அடுத்த பொதுத் தேர்தல் வழங்கும் வாய்ப்புகளை வலுவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று கர்பால் வலியுறுத்தினார். இனி, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது.
நாளை, அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், எதிர்த்தரப்பு மேல்முறையீடு செய்வதுடன் அதுவரை தண்டனையை நிறுத்திவைக்குமாறும் விண்ணப்பம் செய்துகொள்ளும் என்றாரவர்.