வேப் பொருட்களுக்கு மத்திய அரசுத் தடை இல்லை, மாநிலங்கள் முடிவு செய்யலாம் – அமைச்சர்

தேசிய அளவில் வேப் பொருட்களின் விற்பனையை அரசாங்கம் தடை செய்யாது, ஆனால் அந்தந்த கொள்கைகளைத் தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு விட்டுவிடுவோம் என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அகமது கூறினார்.

உள்ளூர் அதிகாரிகள்மூலம் வேப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மாநில அரசுகள் தடை விதிப்பதும் இதில் அடங்கும் என்றார்.

“மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தக் கட்டத்தில் வேப்பிங் செய்வதை எங்களால் தடை செய்ய முடியாது, எனவே நாங்கள் ஒழுங்குபடுத்தும் நிலைப்பாட்டை எடுக்கிறோம்”.

“முதல் கட்டமாக, நிச்சயமாக நாங்கள் தடை செய்ய விரும்புகிறோம், ஆனால் தடை செய்ய முடியாவிட்டால், நாம் ஒழுங்குபடுத்த வேண்டும். தற்போதைக்கு ஒழுங்குமுறையே சிறந்த அணுகுமுறை என்று மத்திய அரசு கருதுகிறது,” என்றார்.

அக்டோபர் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த பொது சுகாதாரச் சட்டம் 2024 (சட்டம் 852) க்கான புகைபிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வேப்பிங் செய்வதற்கான மத்திய அரசின் ஒழுங்குமுறை அணுகுமுறை இருக்கும் என்று சுல்கேப்ளி கூறினார்.

பதிவு, விற்பனை மற்றும் விநியோகம் உட்பட முழு வேப் விநியோக சங்கிலியையும் ஒழுங்குபடுத்துவதற்கான முழுமையான சட்ட கட்டமைப்பை இந்தச் சட்டம் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அகமது

“சட்டம் 852 மூலம் ஒழுங்குபடுத்தும் அமைச்சகத்தின் முடிவு, ஒரு விரிவான சட்டமியற்றும் நடவடிக்கையாகும். வேப்பிங்கை முழுவதுமாகத் தடை செய்யாமல், ஒழுங்குபடுத்தும் அணுகுமுறையை நாங்கள் எடுக்கிறோம்,” என்றார்.

பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் ஆணை குறித்து கருத்து கேட்டபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சுல்தானின் கூற்றுப்படி, போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்த கவலை, குறிப்பாகப் பகாங் இளைஞர்களிடையே, பரிந்துரையின் அடிப்படையாகும்.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சுல்தான் அப்துல்லா கூறுகையில், வேப்பிங் பெரும்பாலும் போதைப் பழக்கத்திற்கு நுழைவாயிலாகும்.

ஜொகூர் வேப் பொருட்களை விற்பனை செய்வதற்கான தடையை அமல்படுத்தியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இன்று புத்ராஜெயாவில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் (WAAW) 2024 ஐ நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் சுல்கேப்ளி பேசினார்.

சுகாதார அமைச்சகம், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து இன்று WAAW 2024 ஐ அறிமுகப்படுத்தியது.

WAAW 2024, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (against antimicrobial resistance) எதிரான போராட்டத்தில் கல்வி, உடனடி நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

AMR இன் கடுமையான அச்சுறுத்தல்குறித்து சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.