சபா அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ரிம1,000 சிறப்பு தொகை

நோன்பு பெருநாளுக்கு முன்னதாக, சபா அரசாங்க ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஆண்டு மாநில அரசிடமிருந்து சிறப்பு உதவியாக 1,000 ரிங்கிட் பெறுவார்கள் என்று முதல்வர் ஹாஜிஜி நூர் அறிவித்தார்.

இதில் 13,000க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஹாஜிஜி கூறினார்.

“கடவுள் கருணை, நோன்பு பெருநாளுக்கு முன் ஒவ்வொருவருக்கும் (ஓய்வூதியம் பெறுவோருக்கு) 1,000 ரிங்கிட் விநியோகம் செய்வோம்,” என்று அவர் கூறியதாக சபா ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், அவர்கள் பொது சேவையில் இருந்த காலத்தில் மாநிலத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை மதிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“சமீபத்தில் மாநில நிதி அறிக்கை தாக்கல் செய்ததில், தற்போதைய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உதவி கிடைத்தது. சபா அரசுக்குப் பங்களித்த மாநில ஓய்வூதியர்களுக்கு ‘சிறப்பு தொகை’ வழங்காதது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

ஹாஜிஜி முன்பு அடுத்த ஆண்டுக்கான மாநில நிதியின் கீழ் சபாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அறிவித்தார். இந்த நிதி அறிக்கைக்கு மாநில சட்டசபையில் கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

 

-fmt