இராகவன் கருப்பையா- தலைநகரில் மிகப்பெரிய இந்திய உணவரங்கம்தலைநகரில் உதயம் காண்கிறது, டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை ‘ஃபூட் கோர்ட்’ எனப்படும் ஒரு இந்திய உணவரங்கம் மிக பிரமாண்டமான வகையில் திறப்பு விழாக் காணவுள்ளது.
தலைநகர் செராஸ் வட்டாரத்தில் ஜாலான் நக்கோடா யூசோஃபில் அமைந்துள்ள இந்த உணவரங்கம் நாட்டிலுள்ள இந்திய உணவகத் தொகுதிகளிலேயே ஆகப் பெரியது என்று நம்பப்படுகிறது.
‘விருந்து’ என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவரங்கம் சீனர்களின் மிகப்பெரிய உணவகத் தொகுதிகளுக்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமாண்ட முன்னெடுப்பை ‘டசாதி அரோமா,’ எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதனுள் மொத்தம் 26 இந்திய உணவுக் கடைகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு செயல்படத் தொடங்கும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் கோபால் ராஜன் குறிப்பிட்டார்.
இந்த உணவுக் கடைகள் 200கும் மேற்பட்ட இந்திய உணவு வகைகளோடு, சீன, மலாய் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளையும் தயார் செய்யும் என்றார் அவர்.
எனினும் ஒரு உணவுக் கடை தயார் செய்யும் அதே உணவு வகைகளை வேறொருக் கடை தயார் செய்யாது என்று குறிப்பிட்ட அவர், எந்தக் கடை எவ்வகையான உணவுகளை தயார் செய்ய வேண்டும் என தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.
உணவு தயாரிப்பில் தூய்மைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்த கோபால் விலைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறினார்.
ஏறத்தாழ 250 வாடிக்கையாளர்கள் அமரக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த உணவரங்கத்தில் எல்லா சமயத்தவரையும் அனுசரிக்கும் வகையில் மதுபானம், பன்றி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவை கண்டிப்பாக இருக்காது என்றார் அவர்.
ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குத் திறக்கப்படும் இந்த மையம் வார நாள்களில் நல்லிரவு 12 மணி வரையிலும் சனி ஞாயிறுகளில் விடியற்காலை 1 மணி வரையிலும் செயல்படும்.
எந்த ஒரு வேளையிலும் சுமார் 60 வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதிகளையும் தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறிய கோபால், அவற்றுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.