‘வாசகர் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா – சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், ‘வாசகர் களஞ்சியம்’ எனும் ஒரு நூலை வெளியிடவிருக்கிறது.

நாடு தழுவிய நிலையில் உள்ள மொத்தம் 205 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்களை உள்ளடக்கிய இந்நூல்,  எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைநகரில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தின் ‘சோமா’ அரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னதாக மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரையில் தேநீர் உபசரிப்பு நடைபெறும் என அந்த இயக்கத்தின் தலைவர் ந.மதியழகன் குறிப்பிட்டார்.

“நம்மிடையே தற்போது அதிக அளவிலான எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இது நம் சமூகத்திற்கு பெருமை தரக்கூடிய மகிழ்ச்சிகரமான விஷயம்.”

“ஒரு சில படைப்பாளர்கள், தாங்கள் எழுதிய கதை, கட்டுரைகள், கவிதைகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்றவை நூலாக்கம் காணவில்லையே எனும் தவிப்பில் இருக்கின்றனர்.”

“அவர்களுடைய ஏக்கத்தைப்போக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வேண்டும், அவர்களுக்கும் அறிமுகம் வேண்டும் எனும் வேட்கையின் வெளிப்பாடுதான் ‘வாசகர் களஞ்சியம்’ எனும் இந்த ஆவணத் தொகுப்பு,” என மதியழகன் மேலும் கூறினார்.

மொத்தம் 230 பக்கங்களைக் கொண்ட இந்நூல் நிறைய பேருடைய வரலாற்றை நினைவுகூறும்  வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரைப் பதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்நூல் எதிர்காலத்தில் மாணவர் ஆய்வுக் களஞ்சியமாக முக்கியப் பங்காற்றும் வகையிலும் தொகுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களை வெளி உலகுக்கு ஒருசேர அறிமுகப்படுத்தும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்குத் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் பொது மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.