இராகவன் கருப்பையா – பிரதமர் அன்வார், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவ்வப்போது இனங்களுக்கிடையே உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசிவரும் முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் ஒரு சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளார்.
அன்வார் தலைமையிலான ஆட்சியில் மலாய்க்காரர்கள் படிப்படியாக தங்களுடைய உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றும் சொந்த மண்ணிலேயே அவர்கள் அதிகாரத்தைப் பறிகொடுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படப்போகிறது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
துணிச்சலாகக் குரல் எழுப்பும் மலாய்க்காரர்களை, சட்ட நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அரசாங்கம் மிரட்டுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் பிரதமர்களைவிட அன்வார்தான் மலாய்க்காரர்களின் நலன்களை அதிகம் கவனிக்கிறார் எனும் உண்மை எல்லாருக்கும் தெரியும்.
“மலாய்க்காரர்களுக்கு நான் செய்யும் உதவிகளைப் பார்த்து இந்தியர்கள் பொறாமைக் கொள்ளக் கூடாது,” என்று வெளிப்படையாகவே கூறும் அளவுக்கு மலாய்க்காரர்களை அவர் கவனித்து வருகிறார்.
இருந்த போதிலும் மகாதீரின் வீண் விதண்டாவாதங்களை தொடக்கத்தில் பெருவாரியான மலாய்க்காரர்கள் நம்பினார்கள். இனத்துக்காக அவர் போராடுகிறார் என்று பெருமை கொண்டார்கள்.
ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் தற்போது சுதாகரித்துக் கொண்டுள்ளதைப் போல் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் அவருடையக் கூற்றை கிண்டல் செய்து வசைபாடுகின்றனர்.
எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இவருடைய ‘டிராமா’வின் உள்நோக்கம் குறித்து நன்றாகவேத் தெரியும். ‘கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதிகெட்டா போகும்?’
இருப்பினும் ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்,’ எனும் ஒரு நப்பாசையில் அவருடன் ஒட்டிக் கொண்டு ஜால்ரா போடுகின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகத் துடிக்கும் குறிப்பிட்ட சிலர்தான் அவரோடு ‘ஆமாம் சாமி’ போடுவதும் மக்களுக்குத் தெரியாமல் இல்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதே போன்றதொரு சர்ச்சையை மகாதீர் கிளப்பியதை நாம் இன்னும் மறக்கவில்லை. ‘மலாய் பிரகடனம்’ எனும் பெயரில் மலாய்க்காரர்களை ஒன்று திரட்டப் போவதாக மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டார்.
எனினும் அப்பேரணிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. அப்படி இருந்தும் சும்மா விட்டாரா? இல்லை! ‘அன்வார் மலாய்க்காரர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை’ எனவும் ‘அவர்களை பேசவிடாமல் தடுக்கிறார்’ என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார்.
அதுமட்டுமின்றி, ‘மலாய்க்காரர்களை நான் காப்பாற்றப்போகிறேன்’ என்றும் சூளுரைத்தார். அன்வாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அவரைக் கவிழ்க்க வேண்டும் எனும் ஒரு தீய நோக்கத்தில்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என அப்போதே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
ஒவ்வொரு முறையும் மலாய்க்காரர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்துவதைப் போல காய்களை நகர்த்தும் அவர் தனது நடவடிக்கைளினால் அவர்களை பிளவுபடுத்துகிறார் என்பதுதான் உண்மை.
‘கூட்டத்தோடு கோவிந்தா’ போடும் ஒரு கும்பலை கடந்த வாரத்தில் ஒன்று திரட்டிய அவர், மலாய்க்காரர்களின் நலனுக்காக பாடுபடுவதைப் போலான உணர்ச்சிமிக்க கருத்துகளை அன்வாருக்கு எதிராக வெளியிட்டார்.
எனினும் சுயநல வேட்கையில்தான் அவர் இந்தக் கூட்டத்தைத் திரட்டினார் என வெகுசன மக்களுக்கு அப்பட்டமாகவேத் தெரிகிறது. அதனால்தான் நிறைய பேர் அவரை பொருட்படுத்தவே இல்லை.
அவருடைய இரு மகன்கள் ஊழல் தடுப்பு வாரியத்தின் விசாரணையில் சிக்கியுள்ளனர். இதற்கு அன்வாரைத்தான் அவர் குறை சொல்கிறார்.
சிங்கப்பூருக்குக் கிழக்கே உள்ள ‘பத்து பூத்தே’ தீவு அந்நாட்டுக்குத்தான் சொந்தம் என கடந்த 2018ஆம் ஆண்டில் அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது நாம் அறிந்ததே.
மகாதிர் பிரதமராக இருந்த வேளையில் நிகழ்ந்த அந்த இழப்பு குறித்து விசாரிப்பதற்கு ‘அரச விசாரணை ஆணையம்’ அமைக்க அண்மையில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாகவும் அன்வார் அரசாங்கத்தின் மீது அவர் கடும் கோபமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.