நான் இறுதியில் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டேன் என்கிறார் அன்வார்

அன்வார் இப்ராஹிம் தமது 23 வயது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

64 வயதான அந்த பிகேஆர் மூத்த தலைவரை விடுவித்த நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா, அரசு தரப்பு வழங்கிய டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தின் மீது சந்தேகம் தெரிவித்தார்.

“அந்த ஆதாரத்தை பரிசீலித்த பின்னர் அந்த ஆதாரம் 100 விழுக்காடு தூய்மை கெடவில்லை என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை.”

“ஆகவே எஸ்பி1 சைபுலின் அத்தகைய ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம் புரியப்பட்டுள்ளதாக தீர்ப்பளிப்பதற்கு நீதிமன்றம் தயங்குகிறது.”

எதிர்பாராத அந்தத் தீர்ப்பை செவிமடுத்ததும் நீதிமன்றம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தது.

தீர்ப்பைக் கேட்டதும் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கண்ணீர் மல்க தமது கணவர் அன்வார் இப்ராஹிமை கட்டி அணைத்துக் கொண்டார்.

அன்வார் உடனடியாக தமது வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறினார்.

“என்னுடைய நடத்தை மாசுபடுத்தப்பட்ட பின்னர்  நான் இறுதியில் குற்றமற்றவன் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. நான் வான் அஜிஸாவுக்கும் கர்பால் சிங் தலைமையில் இயங்கிய வழக்குரைஞர் குழுவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.”

பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கும் அன்வார் நன்றி கூறினார்.

“நாங்கள் சீர்திருத்த போராட்டத்தை, ஊழல் எதிர்ப்பைத் தொடரவும் பத்திரிக்கை சுதந்திரத்துக்குப் போராடவும் விரும்புகிறோம்.”

சைபுல்: இந்த உலகில் மட்டுமின்றி மறுமையிலும்

இதனிடையே குதப்புணர்ச்சி புகார்தாரரான சைபுல் டிவிட்டரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “இந்த உலகில் மட்டுமின்றி மறுமையிலும் நான் தலைவிதியை ஏற்றுக் கொள்கிறேன். நான் அமைதியாக இருந்து தொடர்ந்து தொழுவேன்.”

புக்கிட் குளுகோர் எம்பி-யும் டிஏபி தலைவருமான கர்பால் தலைமையிலான வழக்குரைஞர் குழு அன்வாரைப் பிரதிநிதித்தது. அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் தலைமை தாங்கினார்.

சைபுலை தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக முன்னாள் துணைப் பிரதமருமான அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.