சமீபத்தில் புக்கிட் ஜாலிலில் ரிம 300,000 திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 21 நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா, தற்சமயம் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தற்காலிகமாகச் சேரஸ் மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மற்றவர் விசாரணையின் முடிவு வரும் வரை டாங் வாங்கிக்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.
“தற்போது, அவர்கள் இடைநீக்கம் செய்யப் பரிசீலிக்கப்படவில்லை, ஆனால் தற்காலிகமாக வேறொரு மாவட்ட காவல் தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்”.
“வழக்கு தீர்க்கப்பட்டு, விசாரணை நிறைவடைந்துள்ளது. இது பொது ஊழியர்களை உள்ளடக்கியது என்பதால் புக்கிட் அமனின் கூடுதல் அறிவுறுத்தல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காகப் பிப்ரவரி 23 அன்று 44 மற்றும் 34 வயதுடைய ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கார்போரல் ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஒரு தனி நிகழ்வில், ஒரு போலீஸ் அதிகாரி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறிய ஒரு பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள், மேலும் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரலின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ருஸ்டி கூறினார்.
டிசம்பர் 19 அன்று தலைநகரில் நடந்த ஒரு கூட்டம் தொடர்பாக மாவட்ட காவல் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறிய ஒரு பெண்ணின் விசாரணைக்கு உதவுவதற்காக, ஐந்து நபர்களிடமிருந்து காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகப் பிப்ரவரி 11 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளதாக வாங்சா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் லாசிம் இஸ்மாயில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.