ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?  

இராகவன் கருப்பையா — கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்தாற்போல் இந்து மதத்தை இழிவுபடுத்தி வரும் ஒரு முன்னாள் இந்துவான ஸம்ரி வினோத் என்றொரு இஸ்லாமிய மத போதகர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சீண்டலைத் தொடங்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இம்முறை முன்னாள் மனிதவள அமைச்சர் சரவணனும் முன்னாள்  சட்டத்துறை துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங்கும் கூட அவருக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

“காவடி எடுப்பவர்கள், ‘கள்’ அருந்திவிட்டு போதையில் ஆடுவதைப் போல் உள்ளது,” என்று இந்துக்களை இழிவுபடுத்திய ஸம்ரியை ‘சொஸ்மா’ சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும் என சரவணன் சற்றுக் கடுமையாகவே குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபரை சட்டப்படி கைது செய்ய வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று ஆவேசப்படுவதெல்லாம் நியாயம்தான். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்றால்  இந்நாட்டில் உள்ள இந்துக்களின் ஆதரவை அரசாங்கம் இழக்க நேரிடும் என்று குறிப்பிடுவதுதான் ஏற்புடையதாக இல்லை.

அடுத்த பொதுக் தேர்தலில் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் இந்துக்களின் ஆதரவை இழக்குமா இல்லையா என்பது வேறு விஷயம். ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது.’

இந்துக்களின் ஆதரவை இழக்க நேரிடும் எனும் அச்சத்தின் பேரில் ஸம்ரியை அரசாங்கம் கைது செய்யும் நிலை இருக்கக் கூடாது. ஏனெனில் இது அரசியலுக்கோ அரசாங்கத்திற்கான இந்துக்களின் ஆதரவுக்கோ அப்பாற்பட்ட ஒரு விஷயம். அது ஒரு குற்வியல் குற்றம்.

மாறாக, பிற மதத்தை ஒருவர் இழிவுபடுத்தினால் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் அவர் மீதான நடவடிக்கை இருக்க வேண்டும். இதில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது.

கடந்த காலங்களைப் போல இந்த தடவையும் அந்த நபர் தொடர்பான விவாரத்தில் சட்டம் தனது கண்களை முடிக் கொண்டுதான் இருப்பதைப் போல் தெரிகிறது.

வழக்கம் போல அவருக்கு எதிராக எண்ணற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரையிலும் காவல்துறை தரப்பில் ஒரு அணுவும் நகரவில்லை என்பது நமக்கு ஏமாற்றமளிக்கும் விஷயம்.

இதனைக் கருத்தில் கொண்டு, சரவணன், ராம் கர்ப்பால் மற்றும் பினேங், ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நேத்தாஜி ராயர் போன்றோர் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து காவல் படைத் தலைவர் ரஸாருடின் அல்லது பிரதமர் அன்வாரையே நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்க்கமான ஒரு முடிவு காண வேண்டும்.

இந்தியர்களின் நலன் கருதி, குறிப்பாக இந்து சமயத்தின் மாண்பை பாதுகாக்கும் பொருட்டு இப்படி ஒரு முன்னெடுப்பை அவர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது.

‘கொட்டக் கொட்ட நாம் குனிந்து கொண்டே’ இருக்க முடியாது. இந்த நபர் மட்டும் ஏன் செல்லப் பிள்ளையைப் போல் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறார் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

ஸம்ரி போன்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஒற்றுமைத் துறையமைச்சர் எரன் அகோ டாகாங் கூட தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

இருந்த போதிலும் ஒன்றும் நடக்கவில்லை. யாருடைய தைரியத்தில் இவ்வளவுத் திமிராக அவர் தொடர்ந்தாற்போல் இந்து மதத்தை இழிவு படுத்தி வருகிறார் என்று தெரியவில்லை.

இது குறித்து கருத்துறைத்த அன்வார், அரசியல் தலைவர்கள் இப்பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என பொதுவாக, பட்டும் படாமலும்தான் பேசினாரேத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை என்பதும் நமக்கு ஏமாற்றம்தான்.

இதை குற்றவியல் (Penal Code) முறைப்படி கையாலாமல், அரசியல்தான் வழிமுறையென்றால், அது இந்தியர்கள் ஒருசிறுபான்மை என்பதால் நமக்கு விமோசனம் கிடைக்காது.

இந்தியர்களுக்கு இருக்கும்  கட்சி அரசியல் தேர்வுகள்  இரண்டு மட்டுமே – ஒன்று சமயம் சார்ந்தது (பாஸ்) இன்னொன்று சமய சார்பற்ற கூட்டணி.  எனவே நமது கடுமையான அழுத்தம் அன்வாரின் அரசாங்கத்தின் மீதுதான் விழ எண்டும்.