கி. சீலதாஸ் – சட்டம் எதற்காக இயற்றப்படுகிறது? இயற்றப்படுவதின் நோக்கம் என்ன?
சமுதாயத்தில் அமைதி வேண்டும், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் பாதுகாப்பு நிலவ வேண்டும். சமுதாயத்தில் குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பல காரணங்களை உள்ளடக்கியதுதான் சட்டம் இயற்றப்படுவதற்கான அடிப்படை காரணம். சமுதாயத்தில் பிரச்சினைகள் எழலாம், சச்சரவுகள் எழலாம், தவறான நடவடிக்கைகளில் சமுதாய உறுப்பினர்கள் ஈடுபடலாம். குற்றச்செயல்களில் தைரியமாக இறங்கலாம். வேண்டுமென்றே பல தவறுகளைச் செய்யலாம்.
இத்தகைய நடவடிக்கைகள் சமுதாயத்தின் மற்ற உறுப்பினர்களைப் பாதிக்கும் தன்மை கொண்டவை. இவையன்றி, அன்றாட மனித உறவுகளில் தவறுகள் நேரலாம். அன்றாட தொடர்புகளில் தவறுகள் ஏற்படலாம். இவை வேண்டுமென்றே இழைக்கப்படும் தவறுகள் அல்ல. கவனக்குறைவால் நிகழக் கூடியவை. கொடுக்கல் வாங்கல் தொடர்புகளில் தவறுகள், தாமதங்கள் ஏற்படலாம்.
எனவே, குற்றவியல் சட்டங்கள் வேண்டுமென்றே இழைக்கப்பட்ட குற்றங்களைத் தண்டிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. கவனக்குறைவால் பிறருக்குக் காயம் ஏற்படுத்துவது அல்லது இழப்பினை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ள உரிமையியல் சட்டங்கள் உள்ளன.
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் சட்டங்கள் இயற்றப்படுவதன் நோக்கம் குற்றங்களைத் தடுப்பது, தவறுகள் நேராதவாறு மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டுமெனச் சொல்லுவதில் பிசகு இருப்பதாகக் கூற முடியாது.
சட்டத்தின் தேவையை, நோக்கத்தை ஆய்ந்துப் பார்த்தால் அவை ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தும். ஆனால், மனிதனின் தேவை, சமுதாயப் பாதுகாப்பு, அவனுடைய நோக்கம் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தத் தேவையையும் நோக்கத்தையும் சட்டம் உறுதிப்படுத்துகிறது என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
சட்டம் இருந்தால் போதுமா?
சட்டத்தை அமல்படுத்த பல வழிமுறைகள் தேவை. அமல்படுத்த மனித உதவியும் தேவை. இவற்றைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அமலாக்கத்துறைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அவர்களின் பொறுப்பு நாட்டில் இயங்கும் சட்டங்களை அமல்படுத்துவதாகும். அமல்படுத்துவது என்றால் சட்டங்களை மீறாத நிலையைக் காப்பதாகும். உதாரணத்திற்கு, காவல்துறையை எடுத்துக்கொள்வோம். காவல்துறை எல்லாவிதமான குற்றச்செயல்களைத் தடுக்கும் அதிகாரத்தை மட்டும் பெற்றிருக்கவில்லை.
குற்றம் புரிந்தோரைச் சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சட்டத்தை மீறியவருக்குத் தண்டனையைப் பெற்று தர வேண்டும். இது காவல்துறை, சட்டத்துறை ஆகியோரின் பொறுப்பு. தண்டனையை விதிப்பது நீதித்துறையின் பொறுப்பு.
இவற்றை எல்லாம் கவனிக்கும் போது நாட்டில் சட்ட ஒழுங்கு நிலவுவதற்கு அமலாக்கத்துறையின் பொறுப்பு மிகவும் முக்கியமானதாகும். அமலாக்கத்துறை மட்டும்தான் பொறுப்பை ஏற்க வேண்டுமா?
அப்படி நினைப்பது தவறு. பொது மக்களும் சட்டத்திற்கு உட்பட்டு அதன் மகத்துவத்தை உணர்ந்து வாழ்வதும், செயல்படுவதும் தவிர்க்க முடியாத கடமைகளாகும். அமலாக்கத் துறை பொது மக்கள் ஆகிய இரு தரப்பினரையும் எடுத்துக்கொண்டு யாருடைய பொறுப்பு மிகவும் முக்கியமானது என்ற ஆய்வில் இறங்கினால் திருப்திகரமான முடிவு கிடைக்காது.
காரணம், அமலாக்கத்துறையின் பொறுப்பு எல்லாருடைய நன்மையையும் பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டது. தனிப்பட்டவரின் கடமை தம்மை மட்டும் பாதிக்கலாம் அல்லது மற்றொருவரைப் பாதிக்கலாம். இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், கருத்தையன் வேலனின் வீட்டிற்குள் புகுந்து பொன் ஆபரணங்களைத் திருடுகிறான். நாட்டுக்கு எதிரான குற்றத்தைப் புரிந்த கருத்தையனுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.
இந்தச் சூழ்நிலையில் பாதிப்புற்றது வேலன் மட்டும்தான். சமுதாயத்தின் உறுப்பினர் ஒருவர் மட்டும் பாதிப்புற்றுள்ளார். ஒரு வேளை வேலன் இழந்த பொன்னாபரணம் கருத்தையனிடமிருந்து மீட்கப்பட்டிருக்கலாம். வேலனிடம் அது ஒப்படைக்கப்படலாம். இழப்பு இல்லை.
ஆனால், கருத்தையன் ஒரு புகழ்வாய்ந்த அரசியல்வாதி என்று வைத்துக்கொள்ளுங்கள். அரசில் உயர்வான பதவி வகிக்கிறார். ஊழல் செய்வது அவருடைய கைதேர்ந்த கலை. அவரால் ஏற்படும் இழப்பு ஒருவரை மட்டும் பாதிக்காது; நாட்டு மக்கள் எல்லோரையும் பாதிக்கும்.
இதைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டால் நாடு அழிவுறும். நாடு அவலநிலையை அடைந்தால் மக்கள் அதிலிருந்து தப்ப முடியுமா? நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை மக்கள்தான் சுமக்க வேண்டும். இதே நிலையைச் சர்வ சாதாரண நடைமுறையில் பார்க்க முற்படலாம்.
இப்பொழுது இயந்திர வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. சாலைகள் பாதுகாப்பற்றவைகளாக மாறி வருகின்றன. இந்த இயந்திர வாகனங்கள் உயிரைப் பறிக்கும் தன்மையைக் கொண்டவை என்று ஆஸ்திரியா நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது உண்மை.
இந்த இயந்திர மிருகங்கள் உயிரை மட்டும் பறிக்கும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத – கொடுமையான உடல் உறுப்புகளுக்குச் சேதம் விளைவிக்கும் தரத்தையும் கொண்டிருப்பது நாம் அடிக்கடி காணும் உண்மை.
எனவே, இந்தப் பயங்கரமான உயிர்க்கொல்லிகள் பயன்படுத்தும் போது பல விதிமுறைகள் இருப்பதையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும். மக்கள் அறிந்திருந்தால் மட்டும் போதாது, அமலாக்கத் துறையின் கரிசனம் இதில் மிகவும் முக்கியமாகும்.
இப்பொழுது இயந்திர இரு சக்கர வண்டிகளின் (motorcycle) பெருக்கம் அதிசயமாக இருக்கிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் போது போக்குவரத்துச் சாலை விதிகளை மீறுவது குற்றமாகும்.
இந்த இயந்திர இரு சக்கர வண்டியில் இருவர் மட்டும்தான் சவாரி செய்யலாம். ஆனால், இன்று இருவருக்கும் மேற்பட்டோர் சவாரி செய்வது சாதாரண காட்சியாகும். அவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாகச் சவாரி செய்வது குற்றம் மட்டுமல்ல அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பயங்கரமானவையாகும்.
இந்தப் பயங்கரமான பின்விளைவுகளை உணராதவர்கள் இன்று கூட சட்டத்தை மீறத் தயங்காது பவனி வருவதை அமலாக்கத் துறையின் ஆளுமையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது எனலாம்.
இயந்திர இரு சக்கர வண்டியில் சவாரி செய்யும் போது விபத்து ஏற்பட்டால் பெரும்பாலும் கால்களும் கைகளும் பாதிப்படைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. கால் அல்லது கையை இழந்து வாழ்நாள் முழுவதும் துயர் கடலில் மிதக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தது யார்?
இளைஞர்கள் என்றால் அவர்கள் விவரம் அறிந்தவர்கள். சிறுவர்கள் சிறுமிகள் பள்ளிக்கூடத்திற்கு இயந்திர இரு சக்கர வண்டியைக் கொண்டு செல்லும் போது விபத்து ஏற்பட்டு கை, கால் இழப்பு நேரிட்டால் அது எவ்வளவு கொடுமையான விளைவு! பெற்றோர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா?
இயந்திர இரு சக்கர வண்டியைப் பயன்படுத்துவோர் சாலை விதிமுறைகளை புறக்கணிப்பதைத் தைரிய செயல் என்று நினைக்கிறார்கள். இது தவறான மனப்பான்மை.
பெரும் குற்றம் சட்டத்தைப் புறக்கணிப்பது, தைரியத்தை வெளிப்படுத்தாது. மாறாக, கேவலமான மூர்க்கத்தனத்தைக் காட்டுகிறது.
எல்லோரும் நலமாக, நீண்ட காலம் வாழ, குறிப்பாக உடல் உறுப்புகள் சேதமடையாமல் வாழ சாலை விதிகளைப் பின்பற்றுவது விவேகமாகும். அமலாக்கத்துறையின் பொறுப்பும் இதில் முக்கியமாகும். சாலை விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டிருந்தால் கொடுமையான பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.
சட்டத்தைப் புறக்கணித்தால் ஆபத்து என்பதை உணர்த்தும் பொறுப்பு அமலாக்கத்துறைக்கு உண்டு.