சிண்டிகேட் பிறப்புச் சான்றிதழ்களை ரிம 50,000 வரை விற்றது

தேசிய பதிவுத் துறையை (NRD) ஏமாற்றி முறையான பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்த பிறப்புப் பதிவுக் கும்பல், தத்தெடுக்கப்பட்ட அல்லது நாடற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ரிம 50,000 வரை சான்றிதழை விற்பனை செய்வதாக நம்பப்படுகிறது.

ஒரு வட்டாரத்தின்படி, குழந்தையின் பிறப்பு குறித்த போலி ஆவணங்களைப் பதிவு செய்யும்போது NRD கவுண்டரில் சமர்ப்பிக்க, குழந்தையின் உறவினர்கள்போல் நடிக்கத் தனிநபர்களைக் கும்பல் பணியமர்த்துகிறது.

“சட்ட வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களால் வழங்கப்படும் போலி ஆவணங்கள், சிண்டிகேட்டால் தயாரிக்கப்படுகின்றன”.

“என்ஆர்டி வழங்கிய பிறப்புச் சான்றிதழை ‘உறவினர்’ பெற்ற பிறகு, அந்த ‘உறவினர்’ அந்தச் சான்றிதழைச் சிண்டிகேட்டிடம் ஒப்படைப்பார், பின்னர் அவர்கள் அதைக் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வார்கள் – பெரும்பாலும் ஆவணத்திற்கு அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஆதாரத்தின்படி, போலி பிறப்புச் சான்றிதழின் விலை தேவையைப் பொறுத்து ரிம 10,000 முதல் ரிம 50,000 வரை இருக்கும்.

இந்த மோசடியில் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் ஈடுபாடுகுறித்து MACC இன்னும் விசாரித்து வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

“இதுவரை, Ops Outlander மூலம், போலி பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதில் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு அரசு நிறுவனத்தின் அதிகாரி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, MACC ரிம 100,000 மதிப்புள்ள 11 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது, மேலும் 30 ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது.

மார்ச் 11 அன்று, 20 முதல் 80 வயதுக்குட்பட்ட 16 நபர்கள், கிளாங் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் Ops Outlander மற்றும் Ops Birth இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு அரசு ஊழியர், டத்தோஸ்ரீ என்ற பட்டப்பெயரை கொண்ட ஒரு மருத்துவ பயிற்சியாளர், ஒரு சட்ட பயிற்சியாளர், முகவர்கள் மற்றும் பிறப்பு பதிவு விண்ணப்பதாரர்கள் ஆகியோர் அடங்குவர்.

அவர்கள் 2013 முதல் 2018 வரையிலும், 2023 முதல் 2025 வரையிலும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் தவறான பிறப்பு உறுதிப்படுத்தல் ஆவணங்களைத் தயாரித்து சமர்ப்பித்தல் உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.