ஜைட்: மலாய்க்காரர்கள் ஊழல்மீது அல்லாமல், கோயில்மீது ஏன் கோபப்படுகிறார்கள்?

கோயில்-மசூதி பிரச்சினை தொடர்பாகச் சமூக ஊடகங்களில் மலாய்க்காரர்களிடையே நிலவும் கடுமையான சீற்றம் குறித்து ஜைத் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில் ஊழல் வழக்குகள்மீது இதே போன்ற கோபம் இல்லாதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“சபாவில் நடந்து வரும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மீது நாம் அதே அளவிலான கோபத்தைக் காட்டினால், சமூகம் மற்றும் தேச முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய சிறந்த தலைவர்களை நாம் பெறுவோம்,” என்று முன்னாள் சட்ட அமைச்சர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக ஒரு முகநூல் பதிவில், அரசாங்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கு நிலம் அல்லது நிதி உதவி வடிவில் சலுகைகளை வழங்கும்போது முஸ்லிம்களிடையே ஏற்படும் விரக்தி குறித்து ஜைத் (மேலே) கவலை தெரிவித்தார்.

“முஸ்லிம்கள் திருப்தி அடைய போதுமான அளவுக்கு மசூதிகளையும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியையும் பெற்றுள்ளனர். ஆனாலும், கோலாலம்பூரில் சமீபத்தில் நடந்த கோயில் பிரச்சினை தொடர்பாகச் சமூக ஊடகங்களில் இவ்வளவு கோபத்தைக் காண்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்களும் நாட்டின் கருவூலத்திற்கு பங்களிக்கும் வரி செலுத்துவோர் என்றும், எனவே, அரசாங்க உதவிக்குத் தகுதியானவர்கள் என்றும் ஜைத் விரிவாகக் கூறினார்.

“அவர்கள் மலேசியாவின் குடிமக்கள். அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும் சேவை செய்யவில்லை – அது அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களின் நலன்களை நிலைநிறுத்துகிறது”.

“எனவே, இந்தப் பிரச்சினையைத் தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்துபவர்களால் அனைவரும் பாதிக்கப்பட வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன். தீயை மூட்டும் சாமியார்கள், மதம் நல்லாட்சி பற்றி என்ன கட்டளையிடுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

‘பிரதமருக்கு நேரம் கொடுங்கள்’

இன மற்றும் மத பதட்டங்கள் என்ற பரந்த பிரச்சினையில், மூல காரணங்கள் கல்வி முறைக்குள் ஆழமாக உள்ளன – மதச்சார்பற்ற மற்றும் மத ரீதியானவை என்று ஜைத் வாதிட்டார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மக்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர், மத சகிப்பின்மைக்கான உண்மையான காரணங்களை நிவர்த்தி செய்யத் தவறியதற்காக மடானி அரசாங்கத்தை விமர்சித்தார்.

“அவர்கள் இன்னும் ஜாகிம் (இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை) மற்றும் முஃப்திகளின் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளின் பேச்சைக் கேட்கிறார்கள். இஸ்லாமிய போதனைகளின் வெளிப்படையான விளக்கத்தை ஊக்குவிக்கும் புத்தகங்களை அவர்கள் இன்னும் தடை செய்கிறார்கள்”.

“இருப்பினும், நாட்டை மிகவும் மிதமான பாதையை நோக்கி வழிநடத்த அன்வாருக்கு அவகாசம் கொடுங்கள்”.

“3R (இனம், மதம் மற்றும் அரச குடும்பம்) பற்றிய விவாதங்களைத் தடை செய்வது உதவாது என்பதை அவர் உணர்வார் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்கான மூல காரணங்களைப் பற்றி நாம் நேர்மையாகப் பேச வேண்டும்,” என்று அவர் முடித்தார்.