நல்லிணக்கத்தைத் தழுவுங்கள், சமூகத்தில் சச்சரவுகளைத் தவிர்க்கவும் – பஹ்மி

நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தின் மதிப்புகளை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்ட, சியாவலின் உணர்வையும் அர்த்தத்தையும் அனைத்து மலேசியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்ஸில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை உறவுகளை வலுப்படுத்தவும், சச்சரவுகளை மறக்கவும் ஒரு இடமாகவும் வாய்ப்பாகவும் மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

“உறவுகளை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், இணக்கமான சூழலை உருவாக்கவும், அனைத்து மலேசியர்களிடமும் இரக்கமும் நல்லெண்ணமும் நிறைந்த ஒரு மடானி தேசத்தை ஒன்றாகக் கட்டியெழுப்பவும் ஐடில்ஃபித்ரி நமக்குச் சிறந்த இடமாகும்.”

“கடந்துபோன ரமதானின் போதனைகளிலிருந்து நாம் அனைவரும் படிப்பினைகளையும் நுண்ணறிவுகளையும் பெற்று, மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தத் தொடர்ந்து பாடுபட முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று இஸ்தானா நெகாராவில் நடந்த ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கூட்டத்தில் கூறினார்.

யாங் டி-பெர்துவான் அகோங், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் அவரது துணைவியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் கூட்டத்தைத் தொகுத்து வழங்கினர், இதில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் அமைச்சரவையும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி பெர்னாமா தலைவர் வோங் சுன் வை மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

தனித்துவமான மலேசியா

இதற்கிடையில், துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் கே. சரஸ்வதி கூறுகையில், மலேசியா, அதன் பல இன சமூகத்திலிருந்து பல்வேறு வகையான பண்டிகைகளைக் கொண்டு, நாட்டை உண்மையிலேயே தனித்துவமாக்குகிறது.

ஐடிஃபித்ரி போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள்மூலம், சமூகம் ஒருவருக்கொருவர் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிக்கக் கற்றுக்கொள்கிறது என்று அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் கே சரஸ்வதி

“ராயா முஸ்லிம்களால் மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களாலும் கொண்டாடப்படுகிறது. பலர் தங்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்… நான் கூட அரண்மனையில் நடைபெறும் ஹரி ராயா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறேன்”.

“இது போன்ற கொண்டாட்டங்கள், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்த ஒரு முக்கியமான தளமாகச் செயல்படுகின்றன, மேலும் பிற இனக்குழுக்கள் மற்றும் மதங்களின் கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறையை அறிய எங்களுக்கு உதவுகின்றன,” என்று அவர் கூறினார்.