“பூகம்பம் போன்ற ஒரு நடுக்கம்.” இன்று காலைச் சிலாங்கூரில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனி, சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் ஒரு எரிவாயு குழாய் உடைந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டபோது, அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் அப்படித்தான் உணர்ந்ததாகக் கூறினர்.
பாதிக்கப்பட்ட 17 வயது டான் ஜியா ஷின் கூறுகையில், சம்பவம் நடந்தபோது, காலை 8 மணியளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தானும், தனது கர்ப்பிணியான தாய், தந்தை மற்றும் இரண்டு உடன்பிறந்தவர்களும் வீட்டில் இருந்தோம்.
“நாங்கள் விரைவாக வெளியே ஓடிச் சென்றபோது தீக்கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டோம், எங்கள் வீடு சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு பாதைகள் தொலைவில் இருந்தது”.
“அந்த நேரத்தில், எங்கள் ஒரே எண்ணம் எங்கள் கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பு மட்டுமே. நாங்கள் அனைவரும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் காரைக் கூட எடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறினோம்,” என்று பெர்னாமா சந்தித்தபோது அவர் கூறினார்.
இடது காலில் தீக்காயங்களுக்கு ஆளான மற்றொரு பாதிக்கப்பட்ட 42 வயதான லீ வெங் கென், காலை 8.10 மணியளவில் தனது வீட்டின் கூரை இடிந்து வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனம் நசுங்கியபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
“நான் என் வீட்டை விட்டு வெளியே விரைந்தேன், ஆனால் என் வீட்டின் அருகே ஏற்பட்ட தீயின் வெப்பத்தால் கீழே விழுந்து தீக்காயமடைந்தேன்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆண்டி (52) என்று மட்டுமே அறியப்பட விரும்பிய மற்றொரு பாதிக்கப்பட்டவர், தனது வீடு தீ விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீத்தொலைவில் அமைந்திருப்பதாகக் கூறினார்.
சம்பவத்தின்போது, தானும் 14 மற்றும் 18 வயதுடைய தனது இரண்டு குழந்தைகளும் ஒரு நடுக்கத்தை உணர்ந்ததாகவும், வெளியே சென்று எரியும் நெருப்பைக் கண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
“என்னால் காரை வெளியே எடுக்க மட்டுமே முடிந்தது. என் 18 வயது மகள் வெப்பம் காரணமாக வேலியில் ஏறும்போது விழுந்து காலில் காயம் அடைந்தாள்.”
“வீட்டைச் சுற்றியுள்ள அனைத்தும் உருகிவிட்டன (ஏனென்றால் தீப்பிழம்புகள் மிகவும் சூடாக இருந்தன), நாங்கள் வீட்டை விட்டு வெளியே வருவது கடினம்,” என்று அவர் கூறினார்.
சிறிய காயங்களுக்கு ஆளானவர்கள் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் சுகாதார அமைச்சக ஊழியர்களிடமிருந்து சிகிச்சை பெற வைக்கப்பட்டதாகப் பெர்னாமா கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி, 30 பேர் ஆரம்ப சிகிச்சை பெற்றுள்ளனர், சிலர் மேலதிக சிகிச்சைக்காகச் செர்டாங், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.