கெடா மாநிலம் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனங்களைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய புதிய வழிகாட்டுதல்களை வரைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங்கின் கோலா கெட்டில், தாமான் டேசா பிடாராவில் ஐந்து நபர்களை இரண்டு ரோட்வீலர்கள் தாக்கிக் கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சுகாதார நிர்வாகக் கவுன்சிலர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.
“நான் நாய் உரிமையாளரையும் மற்ற தொடர்புடைய தரப்பினரையும் சந்தித்தேன், கலந்துரையாடல்களுக்குப் பிறகு, நாய்களைக் கால்நடை அலுவலகத்தில் ஒப்படைத்து அவற்றைக் கைவிடுவதற்கு உரிமையாளர் ஒப்புக்கொண்டார்”.
“இந்த ஆக்ரோஷமான இனங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்றவை அல்ல. இது ஏற்கனவே இரண்டாவது வழக்கு, இந்த முறை, ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் – இது மிகவும் தீவிரமான விஷயம்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் தான் சந்தித்ததாகவும் அவர் கூறினார். நாய் கடித்ததில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகச் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்களுடைய காயங்கள் மிகவும் கடுமையானவை, மேலும் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வழக்கு முறையாகத் தீர்க்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால்தான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வழிகாட்டுதல்களை வரைவோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கோலா கெட்டில், தாமான் தேசா பிடாராவில் கூண்டிலிருந்து தப்பியதாகக் கூறப்படும் இரண்டு ரோட்வீலர்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்ததாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டது.
இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ரோட்வீலர் நாய்களும் நேற்று கருணைக்கொலை செய்யப்பட்டதை கெடா கால்நடை சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் ஷஹாருல் அமர் தாலிப் உறுதிப்படுத்தினார்.