சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை வெளிப்படையாக நடத்தப்படும் என்றும், எந்தத் தரப்பினரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்றும் சிலாங்கூர் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
Selangor Utility Corridor (KuSel) மற்றும் Subang Jaya City Council (MBSJ) ஆகிய இரு நிறுவனங்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் தணிக்கைக் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக மந்திரி புசார் அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.
“KuSel மற்றும் MBSJ நிறுவனங்களில் தணிக்கைகள் நடத்தப்பட்டன என்பதையும், (அகழாய்வுப் பணிகளுக்கான) ஒப்புதல் செயல்முறைகள் மற்றும் சீரமைப்புகள் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்”.
“உண்மை வெளிச்சத்திற்கு வரும், ஆனால் குழப்பத்தைத் தவிர்க்க முழுமையான மற்றும் கவனமான விசாரணைக்குப் போதுமான நேரத்தை நாம் அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் உண்மையில் நடந்ததாக நேற்று உறுதிப்படுத்திய சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கானின் கருத்துக்களுக்கு முரணாகத் தோன்றிய தனது முந்தைய அறிக்கையையும் அமிருதீன் தெளிவுபடுத்தினார்.
“சம்பவத்தின் முதல் நாளில் நான் கூறியது சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். விசாரணைக்குத் தலைமை தாங்கும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவருடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலின் அடிப்படையில், அந்த இடத்தில் புதைக்கப்பட்ட ஓர் இயந்திரம் இருப்பதை நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தோம்”.
“இந்த விஷயத்தை நிவர்த்தி செய்வதில் எனது பங்கைக் கேள்வி எழுப்பிய சில சமூக ஊடக பயனர்கள் கூறுவது போல், வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் மறுப்பதாகவோ அல்லது எந்தக் கட்சியையும் பாதுகாக்கவும் முயற்சிக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாளை முதல் பள்ளிக்குச் செல்வதற்காக மாநில அரசு போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று அமிருதீன் அறிவித்தார்.
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் மாணவர்கள், புத்ரா ஹைட்ஸ் மசூதி அல்லது MBSJ இன் தேவான் கேமிலியாவில் உள்ள நியமிக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையங்களில் ஒன்றில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“திங்கட்கிழமை முதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை 34 பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல, பிரசரணாவிலிருந்தும் சிலாங்கூர் கோரிக்கை-பதிலளிப்பு போக்குவரத்துத் திட்டத்திலிருந்தும்(Selangor demand-responsive transit programme) ஐந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
“தேவையைப் பொறுத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்கள் இந்த வசதியை அணுகுவதற்கு அந்தந்த நிவாரண மைய ஒருங்கிணைப்பாளர்களிடம் சரிபார்க்கலாம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை வகுப்புகள் மீண்டும் தொடங்கவிருப்பதால், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும், பள்ளியிலிருந்து திரும்பவும் போக்குவரத்து உதவி கோரியதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.