பி. இராமசாமி -டிஏ பி-யின் புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து நிதி வசூலிப்பு : அரசு பொறுப்பை கைகழுவ திசை திருப்பும் முயற்சியா?
DAP பொதுச்செயலாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான அந்தோனி லோக், புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜாயாவில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் தங்களின் முயற்சியைப் பற்றி எழுப்பப்படும் சரியான கேள்விகளை முன்வைப்பவர்களை கண்டனம் செய்வதில் அவசரப்படக்கூடாது.
இந்த கொடூர தீவிபத்தில் பல குடியிருப்பாளர்கள் தங்களுடைய வீடுகளையும் சொத்துகளையும் இழந்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் நிதி திரட்டுவதில் ஈடுபடுவது பாராட்டத்தக்கதுதான். ஆனால், சில முக்கியமான சந்தேகங்கள் நிலவுகின்றன: எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது? பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 100% நிதியும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுமா? அவர்கள் இழந்த சொத்துக்களின் அளவுக்கு இந்த நிதி போதுமா?
மிக முக்கியமாக, ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ள DAP கட்சி, வெறும் நன்கொடை திரட்டுவதற்குப் பதிலாக, நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையையும், பிரதமர் அன்வார் இப்ராகீமையும் வலுவாக வலியுறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் மீண்டும் ஒரு முறை, இந்த கட்சியின் தலைமை, அரசாங்கத்தில் இருந்தபோதும், இவ்வாறொரு முக்கியமான விஷயத்தில் மெளனமாகவும், பொறுப்பில்லாமலும் இருப்பது வேதனையானது.
இணையத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வழங்கிய லாப்டாப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள், நல்ல நோக்கத்தில் இருந்தாலும், இந்த வகையான உதவிகள், பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான நிதி மற்றும் உணர்ச்சிசார்ந்த வலியைத் தீர்க்க உதவுவாது.
மக்களுக்கு உதவ ஆதரவாக இருப்பதாக நீண்ட காலமாக கூறி வரும் DAP, ஏன் அரசாங்கத்திடம் இருந்து உண்மையான நிவாரணத்தையும் நியாயமான இழப்பீட்டையும் கோர இயலாமல் இருக்கிறது?
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மலேசியர்களல்லவா? அவர்கள் கடுமையான நேரத்தில் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லவா?
பல்வேறு வெளிநாட்டு போராட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதி வழங்கப்படும் போது, இங்கு, ஒரு மனிதச் சோகமாக பார்க்கக்கூடிய, தவிர்க்கமுடியாத விபத்தில், எல்லாவற்றையும் இழந்த மலேசியர்கள் மீது அத்தகைய விருப்பமும் பரிவும் ஏன் காட்டப்படவில்லை?
இங்கு ஒரு பெரிய பிரச்சினையே இருக்கிறது: குடியிருப்பு பகுதிகளில் நிறுவப்பட்ட எரிவாயு குழாய்கள் எப்படிக் கேள்விக்குறியாக மாறின? இவை அசாதாரணமாக ஆபத்தானதாக இருக்கவே கூடாது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அரசரின் விசாரணைக் குழு (Royal Commission of Inquiry) அமைக்கப்பட வேண்டும். இது முழுமையாக விசாரணை நடத்தி, பொறுப்பாளிகளை கண்டறிய வேண்டும்.
தனக்கெதிராக எழும் விமர்சனங்களை உதாசீனப்படுத்தும் முன், அந்தோனி லோக் அவற்றை வரவேற்க வேண்டும். 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவையில் இருக்கிற கட்சி எனும் நிலைமையை பயன்படுத்தி, DAP உண்மையான தீர்வுகளைத் தேட வேண்டும். பொதுமக்களிடமிருந்து நன்கொடை கோருவது, அரசின் பொறுப்பை மாற்ற முயற்சிப்பதாகும்.
பிரதமர் அன்வார் இப்ராகீம் இதுவரை இந்த விஷயத்தில் அதிகம் பேசவில்லை என்பதும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அடிப்படையான நிவாரணத்திற்குப் பதிலாக, வெறும் நன்கொடை நடவடிக்கைகளையே முக்கியமாகக் கருதுவதாக இல்லையா? காட்டில் குரங்குக்கு உணவளித்து, வீட்டில் பசியில் வாடும் பிள்ளைகளை கவனிக்க மறுக்கின்ற நிலைதானா?
அரசாங்கத் தலைவர்கள் வெளிப்படையாக பேசாத நிலை, சிக்கலான சந்தேகங்களை உருவாக்குகிறது: மலாய் அடிப்படையிலான கட்சிகள் போல உள்நிலை அரசியல் பலம் DAP-க்கு இல்லையா? அதனால் தான் பொதுமக்கள் நிதிக்கு வசூலுக்கு திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா?
இப்படி இருந்தால், அந்தோனி லோக் இதைப் பற்றி மக்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டும். அன்வார் தலைமையின் கீழ், சீரிய நிவாரண நடவடிக்கைகளுக்கே கூட வலியுறுத்த முடியாத அளவுக்கு DAP நிசப்தமாகிவிட்டதா?
மேலும், எரிவாயு கட்டமைப்பிற்கு பொறுப்பான பெட்ரோனாஸ் மீது இழப்பீட்டுக்கான பொறுப்பை ஏற்க வைக்கும் வகையில் ஏன் அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை?
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை அல்ல, அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்பே தேவை. இதற்கான முதல் படி—அரசாங்கம் முன்னின்று செயல் பட வேண்டும். நன்கொடைச் செயற்பாடுகளுக்குப் பின்னால் மறைவது சரியல்ல.
பி இராமசாமி, உரிமை கட்சியின் தலைவராவார்