போலி பிறப்பு பதிவு படிவங்களைச் சமர்ப்பிப்பதில் ஈடுபட்டுள்ள கும்பல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக வாங்குவதற்கும், போலியான பிறப்புச் சான்றிதழ்களைத் தயாரிப்பதற்கும் ரிம 5,000 முதல் ரிம 50,000 வரை லஞ்சம் வழங்கியதாக நம்பப்படுகிறது.
ஒரு வட்டாரத்தின்படி, ஆரம்ப விசாரணைகளில் ரிம 400,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் இந்தக் கும்பல் 2021 முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
அந்தக் கும்பல் கடந்த புதன்கிழமை MACC ஆல் பிடிப்பட்டது.
“இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள மூளையாகச் செயல்பட்டவரை அடையாளம் காண MACC இன்னும் செயல்பட்டு வருகிறது. முகவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள்மூலம் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தியதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன,” என்று அந்த வட்டாரம் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தது.
புதன்கிழமை, தவறான பிறப்பு விவரங்கள் அடங்கிய பதிவு படிவங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் 28-49 வயதுடைய 14 நபர்கள் ஏப்ரல் 20 வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளால் இந்தப் பிறப்புகள் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் ஹைருசாம் முகமது அமின்@ஹாமிமைத் தொடர்பு கொண்டபோது, குழந்தைகளை வழங்குவதிலும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ள மேலும் பல தனிநபர்கள் அல்லது முகவர்களைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
விரைவில் மேலும் கைதுகள் நடக்க வாய்ப்புள்ளதை அவர் நிராகரிக்கவில்லை