பவானிக்கான வாக்குகள், சமூகத்தின் ஆதங்கமாக அமையும்

இராகவன் கருப்பையா – எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேராக் மாநில ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளில் நம் சமூகத்தின் ஆதங்கம் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே காலங்காலமாக ஒதுக்கப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கும் நம் சமூகம் அண்மைய காலமாக நாடளாவிய நிலையில் நடக்கும் பல சம்பவங்களினால் காயப்பட்டு விரக்திக்குள்ளாகியிருப்பது வெள்ளிடை மலை.

மலேசிய சோஷியலிச  கட்சி(பி.எஸ்.எம்), பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல், ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவும் இந்த மும்முனை போட்டியில், பி.எஸ்.எம்.மை பிரதிநிதிக்கும் 39 வயதுடைய பவானி நாடறிந்த ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராவார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் அவர் ஒரு பல்கலைக்கழக மாணவியாக இருந்த போது கலந்து கொண்ட நிகழ்ச்சியொன்றில் ‘மலேசியாவில் ஏன் இலவசக் கல்வி இல்லை,’ என உக்கிரமாகக் கேள்வி எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நமக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

அந்நிகழ்வில், ‘சுவிம்’ எனப்படும் ‘சுவாரா வனித்தா 1 மலேசியா’ எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவி ஷரிஃபா, “லிஸ்ஸன், லிஸ்ஸன், லிஸ்ஸன்,” என பவானிக்கு அழுத்தம் கொடுத்து அவரை  முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்த முற்பட்டார்.

அவ்விருவருக்குமிடையே அப்போது எழுந்த வாக்குவாதம் சம்பந்தப்பட்ட காணொளிகள் அதிக அளவில் பகிரப்பட்டு, மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்ததோடு ஷரிஃபாவிற்கு எதிராக பெரும் சர்ச்சைக்குள்ளானதும் நாம் அறிந்ததே.

தமது பள்ளிப் பருவத்திலிருந்தே சமூக சேவைகளிலும், மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்த பவானி, பிறகு சட்டத்துறையில் பட்டம் பெற்றதோடு பி.எஸ்.எம். கட்சியில் இணைந்து சாமானிய மக்களின் நலனுக்காக தீவிர பணியாற்றத் தொடங்கினார்.

தற்போது அக்கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளராக மட்டுமின்றி பேராக் மாநில தலைவராகவும் உள்ள அவர், ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் 3ஆவதாகப் பிறந்தார். அவருடைய தாயார் சுப்பம்மா ஒரு மல்லிகைப்பூ வியாபாரியாவார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் காலமான அவருடைய தந்தை கன்னியப்பன் அக்காலக்கட்டத்தில் ஆயர் கூனிங் வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற ஒரு அரசியல் பிரமுகராக வலம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேராக் மாநிலத்தில் உள்ள பூர்வக் குடியினர், விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மனித உரிமை வழக்கறிஞராக செயல்படும் பவானி, இத்தேர்தலில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயர் கூனிங் தொகுதியில் உள்ள பதிவு பெற்ற மொத்த வாக்காளர்களில் 14 விழுக்காடு, அதாவது சுமார் 4,000 பேர் இந்திய வாக்காளர்கள் ஆவர். அவர்களுடைய ஒட்டு மொத்த வாக்குகளும் சற்றும் சிதராமல் பவானிக்கே விழும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக பக்காத்தான் அரசாங்கம் மீதும் அதன் தலைமைத்துவம் மீதும் என்றும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் கோபமும் ஏமாற்றமும் அடைந்திருக்கும் நம் சமூகத்தினர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு இத்தேர்தலை பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

அண்மைய காலமாக நம் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் காட்டும் பாராமுகத்தினால் ம.இ.கா. கூட ஏமாற்றமடைந்துள்ளது உண்மைதான். இருந்த போதிலும் வேறு வழியில்லாமல் பக்காத்தான் சார்பாக அம்னோ வேட்பாளருக்கு அக்கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.

எனினும் வலுவிழந்து காணப்படும் ம.இ.கா.வின் பிரச்சாரங்களினால் எவ்விதத் தாக்கமும் ஏற்படாது என அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. ஏற்கெனவே அக்கட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட நம் சமூகத்தினர் அதன் பிரச்சாரங்களை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.

தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு எம்மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டு இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும்.

அதனால் விரக்தியடைந்துள்ள இந்திய சமூகம் ஆயர் கூனிங் தேர்தலை புறக்கணிக்காது என ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தலை அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் முன்பு ம.இ.கா.வுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட தற்போது பவானிக்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த கோயில் விவகாரம் தொடங்கி, மத போதகர் ஸம்ரி வினோத்தின் வரம்பு மீறல்கள் வரையில் நம் சமூகம் நிறையவே புண்பட்டுள்ளது ஆயர் கூனிங் இந்திய வாக்காளர்களின் உணர்வுகளில் அப்பட்டமாகவே தெரிகிறது.

இந்து மதத்தை சரமாரியாக இழிவுபடுத்தி வரும் ஒரு முன்னாள் இந்துவான வினோத்திற்கு எதிராக 900கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் மீது ஆக்ககரமான நடவடிக்கை இல்லை.

அவர் மட்டுமின்றி சிந்தனைத் தரம் குன்றிய மற்ற பலரும் கூட நம் சமயத்தை கேவலப்படுத்தி காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் ஒரு அணுவும் நகர்வதாகத் தெரியவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமே கண்டும் காணாமல் மவுனம் சாதிப்பதால் நமது அதிருப்தியைக் காட்டுவதற்கு ‘ஒரு விரல் புரட்சி’ மட்டும்தான் ஒரே வழி என ஒட்டு மொத்த சமூகத்தையும் பிரதிநிதிக்கும் வகையில் ஆயர் கூனிங் தொகுதியின் இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்துள்ளதைப் போல் தெரிகிறது.

பினேங் மாநில முன்னாள் துணை முதல்வர் ராமசாமி தலைமையிலான ‘உரிமை’, முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி தலைமையிலான ‘எம்.ஏ.பி.’ கட்சியினர், மற்றும் பஹாங், சபாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி, ஆகியோர் உள்பட எண்ணற்ற இந்தியத் தலைவர்கள் ஆயர் கூனிங்கிற்கு படையெடுத்துள்ளனர்.

அவர்களோடு, ‘மூடா’ கட்சியின் இடைக்காலத் தலைவரும் ஜொகூர் மாநில புத்ரி வங்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமிராவும் தனது குழுவுடன் பவானிக்காக தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார்.

கட்சி பேதம் பார்க்காமல் பவானிக்காக அவர்கள் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது அவருக்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.