சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆன்-கால் டியூட்டி அலவன்ஸ் அதிகரிப்பு ஜூன் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்லி அகமது தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் அபு பக்கர் சுலைமான் தலைமையிலான குழு, தற்போது இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்
“குழு தீவிரமாக விவாதித்து வருகிறது, தற்போது பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம்.”
“24 மணி நேரமும் உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் அனைத்து செயல்முறைகளும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்று அவர் இன்று துன்ஜோங்கில் மாநில அளவிலான 2025 மடானி அஃபியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆன்-கால் கொடுப்பனவு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள்குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, சுல்கேப்லி இவ்வாறு கூறினார்.
அமைச்சகத்திற்கு தலைமை தாங்கியதிலிருந்து சுகாதாரப் பணியாளர்களின் நலனே எப்போதும் தனக்கு முன்னுரிமையாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.
“அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், எனவே இந்த விஷயத்தை மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் விவாதத்தின் முடிவை அடைந்துவிட்டோம். கடவுள் விரும்பினால், இந்த முறை நாங்கள் பிரச்சினையைத் தீர்ப்போம்,” என்று அவர் கூறினார்.
சுகாதார ஊழியர்களுக்கான ஆன்-கால் டியூட்டி அலவன்ஸை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் பெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொடுப்பனவு, சாதாரண வேலை நேரத்திற்குப் பிறகு மருத்துவமனைகளில் பணியின்போது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளுக்கான இழப்பீடாகும்.