வெளிநாட்டு குடிமக்களுக்கான குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதற்காக லஞ்சம் வாங்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவன இயக்குநரை MACC தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
இன்று காலைப் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் குணசுந்தரி மாரிமுத்து ஏப்ரல் 11, 2025 வரை மூன்று நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
ஆதாரங்களின்படி, 50 வயது மதிக்கத் தக்க அந்த நபர், நேற்று மாலை சுமார் 4.55 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய வந்தபோது கைது செய்யப்பட்டார்.
“சந்தேக நபர் 2023 முதல் அரசுத் துறையில் உள்ள ஒரு அதிகாரிக்கு ஒரு விண்ணப்பத்திற்கு ரிம 1,000 முதல் ரிம 30,000 வரை லஞ்சம் வழங்கப் பல நபர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது”.
“இந்த லஞ்சங்கள், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், வெளிநாட்டினருக்கான மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களை அங்கீகரிப்பதை எளிதாக்கும் நோக்கம் கொண்டவை,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
எம்ஏசிசியின் புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் இட்ரிஸ் ஜஹாருதீன் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் கும்பல்களைக் குறிவைத்து, மார்ச் 11 அன்று புலனாய்வுப் பிரிவால் தொடங்கப்பட்ட Ops Fastlane 1.0 மற்றும் Ops Outlander ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படலாம்.
மே 7 அன்று இரண்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஒரு சாதாரண பொதுமக்களின் கைதுக்குப் பிறகு, நடந்து வரும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக மேலும் தனிநபர்கள் விசாரிக்கப்படுவதற்கான சாத்தியத்தை MACC நிராகரிக்கவில்லை என்று சினார் ஹரியான் தனித்தனியாகத் தெரிவித்துள்ளது.
50 முதல் 65 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக நாளிதழ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 16 அன்று, MACC, ரிம 100,000 மதிப்புள்ள 11 வங்கிக் கணக்குகளை முடக்கியதாகவும், விசாரணை தொடர்பான 30 ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் கூறியது.