உயிரிழப்புகளை ஏற்படுத்திய FRU லாரி விபத்துகுறித்து காவல்துறையினர்   முழுமையாக விசாரிக்க உள்ளனர்

தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் சிகஸ்–சுங்கை லாம்பாம் வழியாகப் பெடரல் ரிசர்வ் யூனிட் (Federal Reserve Unit) லாரியும் கற்களை ஏற்றிச் சென்ற லாரியும் மோதிய பயங்கர விபத்துகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று காவல்துறை மூலம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா, நெருங்கிய உறவினர்களின் நலன் தொடர்பான விஷயங்கள் உட்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

“இந்தத் துயரத்தை எதிர்கொள்ளும்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வலிமையாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.”

“விசாரணையைத் தாண்டி, நலன்புரி விஷயங்களுக்கு உதவ காவல்துறை தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று லெங்காங்கின் கம்போங் பெங்கில் இன்று ஒரு தற்காலிக காவல் நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்தபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

முன்னதாக, ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் பக்ரி ஜைனல் அபிடின், காலை 8.54 மணியளவில் நடந்த விபத்தில் ஒன்பது FRU வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

அவர்கள் யூனிட் 5 ஈப்போவைச் சேர்ந்தவர்கள்.

பெரும் இழப்பு

தொடர்புடைய ஒரு நிகழ்வில், ஒன்பது பேரின் மரணம் அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் தோழர்களுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்ஸில் கூறினார்.

பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எப்போதும் முன்னணியில் இருக்கத் தயாராக இருக்கும் தேசிய ஹீரோக்கள் FRU பணியாளர்கள் என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில்

“இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தொடர்பு அமைச்சகத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

“இந்தத் துயர சம்பவம் மிகவும் மனதை உருக்குவதாகவும், அனைத்து மலேசியர்கள்மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, நீதிமான்களின் மத்தியில் இடம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்தக் கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுக்கு வலிமையும் விடாமுயற்சியும் கிடைக்க வேண்டும் என்றும், காயமடைந்த பணியாளர்கள் விரைவாகக் குணமடையவும், அவர்களின் சிகிச்சை சீராக நடக்கவும் அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்யுமாறு பஹ்மி கேட்டுக் கொண்டார்.

“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளைப் பாதுகாக்கவும், நடந்து வரும் விசாரணையை மதிக்கவும், சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுடன் ஒத்துழைக்கத் தகவல் தொடர்பு அமைச்சகம் தயாராக உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் தயாராக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.