பேராக்கின் தெலுக் இந்தானில் இன்று ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய லாரிக்குச் சொந்தமான நிறுவனத்தின் பொறுப்புகுறித்து துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கவனத்தை ஈர்த்தார்.
லாரியில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக அதன் ஸ்டீயரிங் அமைப்பு செயலிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
“வாகனம் புஸ்பகோம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் இது நடந்திருக்கக் கூடாது”.
“நாம் லாரி ஓட்டுநர்மீது மட்டும் பொறுப்பைச் சுமத்தக் கூடாது, நிறுவன உரிமையாளரும் பொறுப்பேற்க வேண்டும்,” என்று ஜாஹித் கூறினார்.
புத்ராஜெயாவில் இன்று சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இன்று காலை 8.50 மணியளவில், ஈப்போவில் உள்ள யூனிட் 5 தளத்தைச் சேர்ந்த ஒன்பது FRU பணியாளர்கள், ஜாலான் சிக்கஸ்–சுங்கை லாம்பத்தில் கற்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் அவர்கள் பயணித்த லாரி மோதியதில் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் காயமடைந்தனர்.
சித்திரை பௌர்ணமி கொண்டாட்டத்தை ஒட்டிப் பணியாளர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்
விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் குறைப்பு
விபத்து அபாயகரமான இடங்களாக அடையாளம் காணப்பட்ட பல நெடுஞ்சாலைப் பகுதிகளில் அரசாங்கம் உடனடியாகத் தெரு விளக்குகளை நிறுவும் என்று ஜாஹிட் கூறினார்.
இன்றைய குழு கூட்டத்தில் இந்த விஷயம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி
கூடுதலாக, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் குழு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
“நாங்கள் எதிர்கொள்ளும் உண்மை என்னவென்றால், மலேசியாவில் 34.1 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர், ஆனால் 38.7 மில்லியன் வாகனங்கள்… இதன் பொருள் வாகனங்களின் எண்ணிக்கை குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது, மேலும் இது சாலை நெரிசல் மற்றும் சாலை விபத்துகளுக்குப் பங்களித்திருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு, கோலாலம்பூர், பினாங்கு மற்றும் ஜொகூர் பாருவில் பிரத்யேக பேருந்து பாதைகளைச் சேர்ப்பதும் அடங்கும் என்று ஜாஹிட் கூறினார்.
“இந்தப் பேருந்துப் பாதைகளைச் சேர்ப்பது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், நெரிசலான பகுதிகள் வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த உயிரிழப்பு விபத்துகுறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் பணிக்குழுவை தனது அமைச்சகம் அமைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்தப் பணிக்குழுவில் நிபுணர்கள் மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் இருப்பார்கள், அவர்கள் சம்பவத்தை ஆராய்ந்து பாதுகாப்பு மேம்பாடுகளைப் பரிந்துரைப்பார்கள்.
“பணிக்குழு மிக விரைவில் அமைக்கப்படும்,” என்று இன்று குழு கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.