புத்ரா ஹைட்ஸ் தீ விபத்துக்குத் தோண்டல் இயந்திரம் காரணமாக இருக்க முடியாது – துணை அமைச்சர்

ஏப்ரல் மாதம் சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு, அருகில் உள்ள தோன்றல் இயந்திர நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்க முடியாது என்று மனிதவள துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமது தெரிவித்தார்.

இன்று காலை மக்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த லிபிஸ் எம்.பி., பரவலாக ஊகிக்கப்பட்ட கோட்பாட்டை நிராகரித்தார், குழாய்கள் தோண்டல் இயந்திரங்களால் அடைய முடியாத ஆழத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறினார்.

“நடந்த சம்பவம்  ‘pengukuran excavator’ (sic) போன்ற உள்ளூர் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்க முடியாது”.

“அந்த இடத்தில் மூன்று முக்கிய குழாய்கள் உள்ளன, நடுவில் சரிவு ஏற்பட்டது”.

“கணக்கீட்டின்படி, (குழாய்கள் ஆறு மீட்டர் ஆழத்தில் உள்ளன), தோண்டல் இயந்திரம்  குழாய்களை அடைவது சாத்தியமில்லை”.

“குழாய்களுக்கு அடியில் மண் அசைவு இருந்ததால் அது (வெடிப்பு) ஏற்பட்டது, அதனால் அது சரிந்தது, மேலும் கசிவு பகுதியில் தீப்பொறி அல்லது உராய்வு ஏற்பட்டபோது, அது வெடிப்பை ஏற்படுத்தியது,” என்று ரஹ்மான் கூறினார்.

ஏப்ரல் 1 துயரத்திற்கு சுழற்சி ஏற்றுதல் தான் காரணம் என்று அதிகாரிகளின் கண்டுபிடிப்புகளைக் கேள்வி எழுப்பிய அஹ்மத் யூனுஸ் ஹைரி (PN-கோலா லங்காட்) எழுப்பிய துணை கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுப்படி, சம்பவத்திற்கு பங்களித்திருக்கக்கூடிய சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வீடுகள் சேதமடைந்தன, மக்கள் காயமடைந்தனர்

ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்குப் பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தில், தீப்பிழம்புகள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு உயர்ந்து, 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது, இதனால் அந்தப் பகுதியின் நிலப்பரப்பு ஒரு பெரிய பள்ளமாக மாறியது.

இந்தச் சம்பவத்தில் 500 மீட்டர் சுற்றளவில் வரிசையாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்தன. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடையே தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளுடன் இந்த வெடிப்பு தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கனரக இயந்திரங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் குழாய்வழியின் பாதுகாப்பு இடையக மண்டலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் பல காட்சிகள் வைரலாகின.

இருப்பினும், ஜூன் 30 அன்று, அதிகாரிகள் தங்கள் விசாரணைகளின் முடிவை அறிவித்தனர், இந்தச் சம்பவம் இயற்கையான காரணிகளால் ஏற்பட்டது என்று கூறி, எந்தவொரு தவறான செயலையும் நிராகரித்தனர்.