இராகவன் கருப்பையா – “சீன மொழி தெரிந்து கொண்டால் பிற்காலத்தில் வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும். அதனால்தான் எங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளிக்கு அனுப்புகிறோம்,” என நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பெற்றோர்கள் தற்போது வாதிடத் தொடங்கிவிட்டனர்.
தமிழ் பள்ளிகளில் புதிய பதிவுகள் குறைந்து வருவதால் இந்தச் சூழல் நமக்கு வருத்தமளிக்கும் ஒரு நிலைதான் எனும் போதிலும் அவர்களுடைய வாதத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. அவர்களுடைய எதிர்பார்ப்பில் ஓரளவு நியாயம் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட, மலாக்காவில் உள்ள ஒரு தமிழ் பள்ளி, அதன் வளாகத்திலேயே சீன மொழி கற்பித்தலுக்கு வழி வகுத்து சாதனை புரிந்து வருகிறது.
“இதன் வழி எங்களால் ‘ஒரு கல்லில் 2 மாங்காய்கைளை அடித்த மாதிரி’ புதிய பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணியுள்ளோம்,” என்கிறார் இச்சாதனையை புரிந்து வரும் ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ் பள்ளியின் தலைமையாசிரியர் வேணி இராஜேந்திரன்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் உதித்த இந்த யோசனைக்கு உரமிடும் வகையில் அவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் அதற்குரியத் திட்டத்தை வரையத் தொடங்கினார்கள்.
உடனே களத்தில் இறங்கிய முருகன் ராஜப்பன் தலைமையிலான பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஜாசின் வட்டாரத்தில் வீடு வீடாகச் சென்று இந்த பகுதி நேர வகுப்புத் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளக்கமளித்து இத்திட்டம் வெற்றிபெற வழிவகுத்தனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7 மணி தொடங்கி 8.30 வரையில் நடைபெறும் இந்த விசேஷ வகுப்பில் தற்பொழுது மொத்தம் 20 மாணவர்கள் மிகவும் உற்சாகமாக சீன மொழியைக் கற்று வருகின்றனர்.
அருகிலுள்ள சீனப் பள்ளி ஒன்றிலிருந்து வரும் ஒரு ஆசிரியை இந்த வகுப்புகளை நடத்துகிறார். அவருக்குக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் இவ்வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் மாதந்தோறும் தலா 40 ரிங்கிட் செலுத்த வேண்டியுள்ளது.
“இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிற போதிலும் நிறைய பெற்றோர்களுக்கு 40 ரிங்கிட் என்பது ஒரு சுமையாகத்தான் உள்ளது. அதனால்தான் இந்த சீன மொழி வகுப்பில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ளனர்,” என வேணி சற்று வருத்தத்துடன் கூறினார்.
அண்மைய காலமாக தேசிய பள்ளிகளில் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் நம் மாணவர்களுக்கு ‘தமிழ் பள்ளியே நமது தேர்வு,’ எனும் பிரச்சாரத்தின் வழி சிறப்பானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க பல்வேறுத் தரப்பினர் பாடுபட்டுக் கொண்டிருக்கினர்.
ஆனால் தமிழ் பள்ளிகளைத் தாண்டி சீனப் பள்ளிகளுக்கு அதிகமான இந்திய மாணவர்கள் அனுப்பப்படுவது இந்தப் பிரச்சாரத்திற்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது.
எனினும் ஜாசின் லாலாங் தமிழ் பள்ளி மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு இப்பிரச்சனைக்கு சிறந்ததொகு தீர்வு என்பதில் துளியளவும் ஐயமில்லை. ஆனால் நிறைய பெற்றோர்களுக்கு பொருளாதாரச் சவால் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகையச் சூழலில், “தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றுவோம், தமிழ் பள்ளியே நமது தேர்வு,” போன்ற சுலோகங்களை மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளும் இதர சமூக ஆர்வலர்களும் பேச்சைக் குறைத்துக் கொண்டு, தமிழ் பள்ளிகளில் சீன மொழி வகுப்புகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
வசதி குறைந்த மாணவர்கள் பகுதி நேர சீன மொழி வகுப்புகளில் சேர்வதற்கு கட்டணம் செலுத்தி உதவுவதன் வழி தங்களுடைய நோக்கங்களை அவர்கள் நிறைவேற்ற முடியும்.
நாடு தழுவிய நிலையில் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் இத்தகைய பகுதி நேர சீன மொழி வகுப்புகள் நடத்தப்படுமேயானால் இந்திய மாணவர்கள் சீனப் பள்ளிகளை நோக்கி படையெடுப்பதை வெகுவாக நாம் குறைக்க இயலும்.
இதன் வழி தமிழ் பள்ளிகளில் புதிய பதிவுகள் நிச்சயம் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

























