கோலாலம்பூரில் மழையிலும் இஸ்ரேலுக்கு எதிரான பேரணி, தலைவர்கள் டிரம்ப் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இன்று மதியம் கோலாலம்பூரில் பெய்த கனமழை, Malaysian Consultative Council of Islamic Organisations (Mapim) ஏற்பாடு செய்த இஸ்ரேல் எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வதைத் தடுக்கவில்லை.

தபுங் ஹாஜி கட்டிடத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு போராட்டம் தொடங்கியது, அங்குப் பல பேச்சாளர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றினர், பின்னர் அவர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு ஒன்றாக அணிவகுத்துச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் மழையையும் பொருட்படுத்தாமல், “சுதந்திர பாலஸ்தீனம்”,            “ஹான்சூர் இஸ்ரேல்” (இஸ்ரேலை அழித்துவிடு),” ஜஹானம் அமெரிக்கா” (அடக்க அமெரிக்கா) போன்ற கோஷங்கள் வழியெங்கும் எதிரொலித்தன.

பேரணியில் பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர் மஸ்லீ மாலிக், பிகேஆர் இளைஞர் தலைவர் கமில் அப்துல் முனிம், பாஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹஃபீஸ் சப்ரி, பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர், பாஸ் கட்சியின் பெண்டாங் எம்பி அவாங் ஹாஷிம் மற்றும் அமானா மற்றும் டிஏபி தலைவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.

மாபிம் தலைவர் அஸ்மி அப்துல் ஹமீத் ஆரம்பத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு எதிர்ப்பு குறிப்பாணையை வழங்க முயன்றார்.

இருப்பினும், முந்தைய ஆர்ப்பாட்டங்களைப் போலவே, எந்தப் பிரதிநிதியும் அதைப் பெற முன்வராததால், அது தூதரகத்தின் தபால் பெட்டியில் வைக்கப்பட்டது.

‘டிரம்ப் அழைப்பை ரத்து செய்’

பின்னர், தூதரகம் தன்னைத் தொடர்பு கொண்டு குறிப்பாணையை ஏற்க ஒப்புக்கொண்டதாகக் காமில் கூட்டத்தினரிடம் கூறினார், அதன் பிறகு அவர் மஸ்லி மற்றும் ஹபீஸுடன் உள்ளே சென்றார்.

பேரணியின்போது பேசிய முக்ரிஸ், இந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கப்பட்ட அழைப்பை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“டிரம்ப் போன்றவர்கள் நமது நண்பர்களாக இருக்க முடியாது. நிச்சயமாக, நாம் ஒரு வெளிப்படையான எதிரியுடன் நட்பு கொள்ள முடியாது”.

“இது மலேசியர்கள் எழுந்து டிரம்பின் வருகையை எதிர்க்க வேண்டிய நேரம்,” என்று அவர் கூட்டத்தினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கூறினார்.

இரண்டு மணி நேர ஆர்ப்பாட்டம் மாலை 4.15 மணியளவில் போலீஸ் மேற்பார்வையின் கீழ் அமைதியாக முடிந்தது, இருப்பினும் ஒரு சிறிய குழுப் போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இருந்தனர்.