நமது மக்கள் பிரதிநிதிகள் இந்திராவுக்கு உதவுவார்களா?

இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சகோதரி, அரசாங்கத்தின் அப்பட்டமான அநீதியில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்காகக் குரல் கொடுக்க நமது பிரதிநிதிகளுக்கு இன்னமும் நேரம் கிடைக்கவில்லை.

இந்திரா காந்தி எனும் அந்த பாலர் பள்ளி ஆசிரியை, 16 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னாவைக்  காண தனியொரு சிங்கப் பெண்ணாக போராடி வருவது எல்லாருக்கும் தெரியும்.

இஸ்லாத்திற்கு மதம் மாறிய பத்மநாதன் எனும் அந்நபர், பச்சிளம் குழந்தையாக இருந்த பிரசன்னாவை கண் இமைக்கும் நேரத்தில் கடத்திச் சென்றார்.

அவர் கைது செய்யப்பட்டு தாயிடம் பிள்ளை ஒப்படைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் திர்ப்பு வழங்கியுள்ள போதிலும் காவல்துறையினர் அத்தீர்ப்பை மதித்ததாகத் தெரியவில்லை.

மகாதீர், முஹிடின், சப்ரி, அன்வார், ஆகிய 4 பிரதமர்களின் ஆட்சியின் கீழ் மொத்தம் 6 முறை காவல்துறையில் தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் அவர்கள் எல்லாருமே சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய அவர்களில் ஒருவர் கூட இந்திராவின் உள்ளக் கிளர்ச்சியை அறியவில்லை, உணரவில்லை.

அந்நபர் உள்நாட்டில்தான் இருக்கிறார், தனது பெயரில் கார் கூட வாங்கியுள்ளார், போன்ற ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவரை கைது செய்வதில் மெத்தனப் போக்குதான்.

நீதிக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையே நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

இவ்விவகாரத்தை ‘ஒரு தேசிய வெட்கக்கேடு’ என இந்திராவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் மிகக் கடுமையாக கடந்த மாதம் சாடினர்.

“பத்மநாதனை கைது செய்து பிரசன்னாவை இந்திராவிடம் ஒப்படைப்பதில் காவல் துறையினருக்கு எவ்விதப் பிரச்சனையும் இருக்காது,” என முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் கூட அண்மையில் கருத்துரைத்தார்.

“மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை மற்றும் தொழிலதிபர் சொசிலாவத்தி கொலை, போன்றக் கொடூரச் சம்பவங்களுக்கே தீர்வு கண்டுள்ள நமது காவல்துறையினருக்கு இது எம்மாத்திரம்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இப்போது 17 வயது இளம் பெண்ணாக வளர்ந்துவிட்ட பிரசன்னாவை கட்டியணைக்கத் துடிக்கும் இந்திரா, அரசு சாரா நிறுவனமொன்றின் ஆதரவுடன் தனித்தேதான் போராடி வருகிறார்.

நம் சமூகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்விவகாரம் குறித்து விலாவாரியாகத் தெரியும்.

இருந்தும், “அதுபற்றி எனக்கென்ன கவலை. அது என் பிரச்சனை இல்லை,” எனும் போக்குதான் நிலவுகிறது என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இப்போது ஆகக் கடைசியாக பத்மநாதன் தொடர்பாக மேலும் பல ஆதாரங்கள். கிடைத்துள்ளன. அதாவது ‘சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை,’ மற்றும் ‘பூடி 95,’ எனும் பெட்ரோல் விலைக் கழிவு முறை, ஆகிய அரசாங்கச் சலுகைகளை அவர் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.

இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, நம் சமூகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து, காவல்துறை தலைவர் முஹமட் காலிட் இஸ்மாயிலை சந்திக்க வேண்டும்.

நீதி, இருட்டரையில் பூட்டப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் அரசியல் வழியாக இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.

முஹமட் காலிட்டைக் காண சந்திப்புறுதி கிடைக்கவில்லை என சாக்குப் போக்குக் கூறாமல் நமது பிரதிநிதிகள் சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி பிரசன்னாவை அவருடையத் தாயிடம் ஒப்படைக்க வகை செய்து இந்திரா குடும்பத்திற்கு ஒளியேற்ற வேண்டும்.