ஹசான் அலியை ஆட்சி மன்றத்திருந்து அகற்ற சுல்தான் ஒப்புதல்

முன்னாள் பாஸ் ஆணையாளர் ஹசான் அலியின் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்துச் செய்ய வேண்டும் என தாம் தெரிவித்த யோசனைக்குச் சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக மந்திரி புசார் காலித் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

“அவர் பாஸ் கட்சியில் இனிமேலும் உறுப்பினராக இல்லாததால் அவர் ஆட்சி மன்ற உறுப்பினராக இனிமேலும் இருக்க முடியாது. அதற்குத் தகுதியுமில்லை என நான் முடிவு செய்தேன்,” என அவர் ஷா அலாமில் மாநில செயலகக் கட்டிடத்தில் நிருபர்களிடம் கூறினார்.

ஜனவரி 8ம் தேதி பாஸ் கட்சியிலிருந்து ஹசான் நீக்கப்பட்டு விட்டதாக தமக்குத் தகவல் தெரிவிக்கும் ஜனவரி 10ம் தேதியிடப்பட்ட கடிதத்தை தாம் நேற்று பாஸ் கட்சியிடமிருந்து பெற்றதாக அவர் சொன்னார்.

கடந்த வாரம் அந்த இஸ்லாமியக் கட்சியிலிருந்து முன்னாள் பாஸ் ஆணையாளரை நீக்கிய பின்னர் மந்திரி புசார் அவரை ஆட்சி மன்றத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.