இராகவன் கருப்பையா – அம்னோ இளைஞர் தலைவர் அக்மாலின் அடாவடித்தனமான போக்கினால் அடுத்த பொதுத் தேர்தலில் அன்வாரின் மடானி அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
மலேசிய அரசியலை 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமித்து வந்த அம்னோவில் இளைஞர் தலைவர் பதவி என்பது பிற்காலத்தில் சக்திவாய்ந்த பதவிகளில் அமருவதற்கான ஒரு ஏவுதளமாகவே இருந்து வந்துள்ளது.
அதனால்தான் காலங்காலமாக அப்பதவிக்கான போட்டி சற்று கடுமையாகவே இருக்கும். அந்தப் பதவியை வகித்தவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே நாட்டின் முன் வரிசை அரசியலில் இடம் பிடித்துள்ளனர்.
தற்போதைய துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் கூட ஒரு காலக்கட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராக இருந்தவர்தான்.
அதன் பிறகு முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின், மற்றொரு முன்னாள் அமைச்சர் கைரி, அவரைத் தொடர்ந்து அசிராஃப் ஆகியோரும் அம்னோவின் இளைஞர் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டும் பொருட்டு அவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தங்களுடைய இனம் மற்றும் மதத்தின் பிரதானக் காவலர்கள் போல காட்டிக் கொள்வதற்கு தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.
தங்களை ‘ஹீரோ’க்களாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு பல வேளைகளில் ஆக்ரோஷனமானக் கருத்துகளையும் கூட அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இருந்த போதிலும் அவர்கள் யாவருமே கண்ணியத்தைக் கடைப்பிடித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். வரம்பு மீறி நடந்து கொண்டதாகக் தெரியவில்லை.
ஆனால் அக்மாலின் போக்கு நமக்கு உண்மையிலேயே வியப்பாக உள்ளது. அவருடைய முரட்டுத்தனமானக் கருத்துகளும் செய்கையும் அம்னோ இளைஞர் பகுதிக்கு முன்னுதாரணம் இல்லாதவையாக உள்ளன.
குறிப்பாக சீன சமூகத்திற்கு எதிராகவும் ஜ.செ.க. அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் அவர் நடந்து கொள்ளும் விதம் அரசாங்கத்தை நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஓர் மருத்துவர் எனும் வகையில் உயர் கல்வி பெற்றுள்ள அவருடைய போக்கில் அரசியல் முதிர்ச்சி இல்லாதது அப்பட்டமாகவே பிரதிபலிக்கிறது.
கே.கே. மார்ட் காலுறை விவகாரம் தொடங்கி பினேங் மாநிலத்தில் தவறுதலாக ஏற்றப்பட்ட மலேசியக் கொடி வரையில் மட்டுமின்றி ஆகக்கடைசியாக யு.இ.சி.(UEC) எனப்படும் சீனக் கல்விச் சான்றிதழ் தொடர்பான எல்லா விஷயங்களிலும் அவருடையக் கருத்துகளும் செய்கையும் நாட்டின் வெகுசன மக்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கும்.
கட்சித் தலைவர் எனும் வகையில் அஹ்மட் ஸாஹிட் மட்டுமின்றி, பிரதமர் எனும் வகையில் அன்வாரும் கூட அவரைக் கட்டுப்படுத்த இயலாமல் உள்ளனர் என்பதைப் போல் தெரிகிறது.
இந்நிலை நீடித்தால் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது உறுதியாகிவிடும்.
இதற்கிடையே மொழி, இனம், அமலாக்கம் மற்றும் உணர்ச்சிமயமான விஷயங்களைக் கையாள்வதில் அரசாங்கம் அடுத்த ஆண்டிலிருந்து கடுமையாக நடந்து கொள்ளும் என சில தினங்களுக்கு முன் அன்வார் அறிவித்தார்.
ஏன் அடுத்த ஆண்டு என அவர் நிர்ணயம் செய்தார் என்று நமக்குத் தெரியவில்லை.
























