ஏஜி: பொதுக் கூட்ட மசோதா பேச்சுச் சுதந்திரத்துக்கு ஊக்கமூட்டுகிறது

பெரிதும் குறை கூறப்பட்டுள்ள அமைதியான பொதுக் கூட்ட மசோதா ‘பேச்சுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதை’ நோக்கமாகக் கொண்டுள்ளது என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.

எந்த ஒரு சட்டமும் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் வெகு வேகமாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா குறித்து தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அந்த மசோதா பற்றி சம்பந்தப்பட்ட பல தரப்புக்களை ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவுக்குப் பதில் அமைதியான பொதுக் கூட்ட சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது என்றும் அப்துல் கனி குறிப்பிட்டார்.

“என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசனை நடத்தும் போது நாம் இன்னும் அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்டுள்ளோம். ( முழு உள்ளடக்கத்தையும் வெளியிடாமல் இருப்பதற்கு).” 

சம்பந்தப்பட்ட பல தரப்புக்களுடன் சரியான முறையில் விவாதங்கள் நடத்தப்படவில்லை என்னும் புகார்களுக்குப் பதில் அளித்த போது அவர் அவ்வாறு கூறினார்.

“சமூகத்தில் உள்ள எல்லாத் தரப்புக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த ஒரு சட்டமும் இருக்காது,” என்றும் அப்துல் கனி  குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா இன்று காலை சட்ட ஆண்டை தொடக்கி வைத்த நிகழ்வில் ஏஜி உரையாற்றினார்.

அந்த நிகழ்வில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மூன்று தலைமை நீதிபதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சிங்கப்பூர் தலைமை நீதிபதி சான் செக் கியோங், இந்தோனிசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி  ஹரிபின் ஏ தும்பா எஸ்எச், புருணை தலைமை நீதிபதி கிப்ராவி பின் கிப்லி ஆகியோரே அந்த மூவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், வழக்குரைஞர்கள், சிவில் சமூகப் போராளிகள், பொது மக்கள் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அமைதியான பொதுக் கூட்ட மசோதா கடந்த நவம்பர் மாதம் மக்களவையில் சமர்பிக்கப்பட்டு மக்களவையிலும் மேலவையிலும் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கியமாக சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அந்த மசோதா தடை விதிப்பது கடுமையான கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது.