அனைத்துத் துறைகளுக்கும் ஏற்றதாக இருக்காது என்பதால், வீட்டிலிருந்தே வேலை செய்யும் (WFH) முறையை விரிவுபடுத்தும் முன்மொழிவு அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடாது என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சையத் உசேன் சையத் உஸ்மான் கூறுகையில், உற்பத்தி, பதப்படுத்துதல், தளவாடங்கள் (logistics), சில்லறை விற்பனை மற்றும் நேரடி சேவைகள் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்துறைகளுக்குப் பணியாளர்கள் பணியிடத்தில் இருப்பது அவசியம் என்றும், அவற்றை முழுமையாகத் தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியாது என்றும் கூறினார்.
“வேலையை வீட்டிலிருந்தே செய்யும் (WFH) அனுமதியை வழங்குவது என்பது அந்தந்த நிறுவனங்களின் செயல்பாட்டுத் தேவைகள், நிறுவனத்தின் டிஜிட்டல் தயார்நிலை மற்றும் வேலையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து முதலாளிகளின் முடிவிற்கே விடப்பட வேண்டும்”.
“அனைவருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே மாதிரியான அணுகுமுறையை (One-size-fits-all approach) மேற்கொள்வது, வணிகச் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களின் போட்டித்திறனைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக, தொழில்நுட்ப வசதிகளும் வளங்களும் குறைவாக உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) இது சவாலாக அமையலாம்,” என்று அவர் பெர்னாமா (Bernama) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்யவும், தினசரி பயணத்தைக் குறைக்கவும், பெட்ரோலைச் சேமிக்கவும், எரிபொருள் மானியங்கள் மீதான சுமையைக் குறைக்கவும், குறிப்பாக RON95 க்கு WFH விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் மற்றும் பொது சேவை இயக்குநர் ஜெனரல் வான் அகமது தஹ்லான் அப்துல் அஜீஸ் ஆகியோர் பொதுத்துறைக்கான WFH திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்ஸில் இன்று தெரிவித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில்
அரசாங்க செய்தித் தொடர்பாளரான பஹ்மி, மேற்கு ஆசிய மோதலின் தாக்கம் குறித்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
‘WFH ஒரே தீர்வு அல்ல’
இதற்கிடையில், மேற்கு ஆசிய மோதல்களால் ஏற்படும் எரிசக்தி விநியோக இடையூறுகள் அல்லது அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு WFH திட்டம் முக்கிய தீர்வாக இருக்காது என்று சையத் ஹுசைன் கூறினார்.
புவிசார் அரசியல் மோதல்கள் பொதுவாக உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து எரிபொருள் மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கின்றன, இது WFH ஏற்பாடுகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியாது என்று அவர் கூறினார்.
இது சம்பந்தமாக, WFH கட்டாயமாக்கப்படுவதற்குப் பதிலாக நெகிழ்வாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
அரசாங்கம், வேலை வழங்குநர்கள் மற்றும் ஊழியர்கள் அல்லது தொழிற்சங்கங்களுக்கு இடையே விவாதிக்கப்பட வேண்டும் என்று சையத் ஹுசைன் (Syed Hussain) மேலும் கூறினார்.
வணிகங்களுக்கு கூடுதல் செலவுகள் அல்லது நிர்வாகச் சுமைகளை உருவாக்காத வகையில், அறிமுகப்படுத்தப்படும் கொள்கைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும், யதார்த்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு அவர் கூறினார்.
























